இளைஞர் மர்ம மரணம் விவகாரம் : காதலியின் சகோதரர்களை கைது செய்ய கோரி போராட்டம்

கன்னியாகுமரி போலீஸ் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார், 27 வயது பட்டதாரியான இவர் பெயின்டிங் காண்டிராக்டராக பணியாற்றி வந்தார்.
இவரும் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கல்லூரி பருவம் தொடங்கி கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே பெண் உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால், காதலர்களை சேர்த்துவைக்க பெண்ணின் உறவினர்கள் மறுத்ததோடு பெண்ணிற்கு மற்றொரு இளைஞருடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
அந்த திருமணத்திற்கு சுரேஷ்குமார் இடையூறு ஏற்படுத்தி விடுவார் என எழுந்த சந்தேகத்தால் பெண்ணின் குடும்பத்தினர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் விசாரணைக்கு சுரேஷ் குமாரை அழைத்த நிலையில் காவல் நிலையத்திற்கு செல்வதாக புறப்பட்ட சுரேஷ்குமார் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தில் காயங்கள் காணப்பட்ட நிலையில் சுரேஷ்குமாரின் மரணம் கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்ததோடு, பிணவறை முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களை கடந்தும் சுரேஷ்குமாரின் மரணம் தொடர்பான மர்மம் விலகாத நிலையில், 3-வது நாளாக உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ்குமாரின் சித்தி ராதிகாவை இளம் பெண்ணின் சகோதரர்களான தாமோதரன் உள்ளிட்ட இருவர் தாக்கியதாக கூறி எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இருவரையும் கைது செய்ய கூறி சுரேஷ்குமாரின் உறவினர்கள் திடீரென நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu