சுனாமி நினைவு தினம்: கதறி அழுது அஞ்சலி செலுத்திய உறவினர்கள்
பொதுமக்கள் உறவுகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில் அந்த மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் வகையில் டிசம்பர் 26 ல் ஏற்பட்ட சுனாமி அமைந்தது.
ஆழி பேரலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன நாளை நினைத்தால் இன்றும் உடலையும் மனதையும் நடுங்க செய்யும் நிகழ்வாகவே மாறி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி முதல் நீராடி காலனி வரையிலான 47 மீனவ கிராமங்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நிலையில், பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சுனாமி ஆழி பேரலைக்கு பலியானார்கள்.
இதனிடையே 17 வருடங்களை கடந்தும் பாதிப்புகள் குறையாத நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.குறிப்பாக உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்ட மணக்குடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.தொடர்ந்து உறவுகளை இழந்த பொதுமக்கள் உறவுகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.அப்போது துக்கம் தாங்காமல் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரையச் செய்யும் விதமாக அமைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu