வழி தவறி கிராமத்திற்கு வந்த கருங்குரங்கு: பொதுமக்களின் நண்பனாக மாறியது

வழி தவறி கிராமத்திற்கு வந்த கருங்குரங்கு: பொதுமக்களின் நண்பனாக மாறியது
X

சிறுவர்களிடம் அன்பாக பழகும் கருங்குரங்கு

குமரியில் வழி தவறி கிராமத்திற்கு வந்த கருங்குரங்கு பொதுமக்களின் நண்பனாக மாறியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆலம்பாறை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மலையிலிருந்து வழிதவறி கருங்குரங்கு ஒன்று வந்தது.

வழக்கமாக, குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் குரங்குகள் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதும், மரங்களில் உள்ள காய்களை சேதப்படுத்துவதும், குழந்தைகளை பயமுறுத்துவதும் உள்ளிட்ட தொல்லைகளை தரும் செயல்பாடுகளில் ஈடுபடும்.

ஆனால் இந்த கருங்குரங்கு பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் அன்பாகவும் பழகி வருகின்றது. இதன் காரணமாக செல்லும் இடமெல்லாம் அதற்கு வயிறு நிரம்ப பழம், பிஸ்கட் உள்ளிட்டகளை பொதுமக்கள் வழங்கி உபசரித்து மகிழ்ந்து வருகின்றனர்.

பொதுமக்களோடு அன்பாகப் பழகும் இந்த விசித்திர கருங்குரங்குடன் செல்பி எடுக்க இளைஞர்களும் சிறு குழந்தைகளும் பொதுமக்களும் போட்டி போட்டு நிற்கும் நிலையில் அவர்களது செல்பிக்கு கருங்குரங்கு தாராளமாக போஸ் கொடுத்து வருகிறது.

சமீபகாலமாக, அப்பகுதி சிறுவர் சிறுமியரின் உற்ற நண்பனாக மாறிய கருங்குரங்கு அந்தப் பகுதியிலேயே இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்பும் அளவிற்கு இருக்கும் இந்த கருங்குரங்கை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags

Next Story