பாஜக விற்கு தாவிய காங்கிரஸ் கவுன்சிலர் - திமுக, பாஜக இடையே கைகலப்பு
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் திமுக மற்றும் பாஜக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று கடந்த 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மல்லிகா என்பவர் வெற்றி பெற்றார்.
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பாஜக நான்கு இடத்தையும், அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களையும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும், சுயேச்சைகள் நான்கு இடத்தையும் கைப்பற்றினர்.
இதனால் தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜக மற்றும் திமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிலையில் பெரும்பான்மைக்கு ஒரு உறுப்பினர் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது. பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற நினைக்கும் திமுக, சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரை தன் வசப்படுத்தும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் 4வது வார்டு உறுப்பினர் மல்லிகா திடீரென காணாமல் போன நிலையில் பதவி ஏற்பு தினமான இன்று கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய்சுந்தரம் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் காரில் வந்து இறங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக காங்கிரஸ் கட்சியினர் மல்லிகாவிடம் பேச முற்பட்டார், ஆனால் அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக மற்றும் பாஜக-வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து டிஎஸ்பி ராஜா தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் இரு பிரிவினரையும் விலக்கி விட்டனர் மேலும் இரு தரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu