குமரி- இளம் பெண் சித்திரவதை - போலி சாமியாரிடம் போலீஸ் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், தனது வீட்டின் அருகே ஒரு கோயில் அமைத்து அருள் வாக்கு சொல்லும் துரைராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தெய்வத்தின் துணையுடன் சரி செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியில் கட்டி போட்டு பிரம்பால் அடித்து பேய் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த கோயிலில் இளம் பெண் ஒருவர் சங்கிலியில் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களுடன் உருண்டு புரளுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்த தகவல் அறிந்த குளச்சல் டி.எஸ்.பி கணேசன் போலீசாருடன் இன்று அந்த கோயிலுக்கு சென்று விசாரணை நடத்திய போது அங்கு ஒரு இளம் பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் இருப்பதை கண்டனர். தொடர்ந்து அந்த கோயில் சாமியாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் நுள்ளிவிளை கிராம பகுதியை சேர்ந்த வினோ என்ற ராணுவ வீரரின் மனைவி 33 வயதே ஆன அஜிதா என்பது தெரிய வந்தது.
மேலும் பட்டதாரி பெண்ணான இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கணவர் வினோ மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் பேய் பிடித்திருக்கலாம் என எண்ணி அந்த பெண்ணின் கை கால்களை கட்டி போலி சாமியார் துரைராஜின் கோயிலுக்கு அழைத்து சென்றதும் தெரிய வந்தது.
சாமியார் அவர்களை குடும்பத்தோடு கோயிலில் தங்க வைத்து அந்த பெண்ணை சங்கிலியில் கட்டிப்போட்டு பேய் ஓட்டுவதாக கூறி சாமி அருள் வந்தது போல் தினமும் பிரம்பால் அடித்து சித்திரவதை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணின் கணவரான ராணுவ வீரர் வினோவை எச்சரித்து படுகாயங்களுடன் இருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் போலி சாமியார் துரைராஜ் இடம் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே இந்த போலி சாமியார் மீது குளச்சல் காவல் நிலையத்தில் கொலை முயற்றி வழக்கு ஒன்று நிலைவையில் உள்ளதாக கூறும் போலீசார் மனநோயாளிகளுக்கு சிறந்த நவீன மருத்துவ முறைகளும் மருத்துவர்களும் உள்ள நிலையிலும் ஒருசிலர் மன நோயாளிகளை பேய் பிடித்திருப்பதாக கூறி பேய் ஓட்டுவதற்காக இது போன்ற போலி சாமியார்களிடம் சிக்கி கொள்வதாக கூறினர்.
மேலும் பணத்தையும் இழந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களை அணுகுவதாகவும் இது போன்ற மூட நம்பிக்கை உடையவர்கள் இருக்கும் வரை போலி சாமியார்களும் முளைத்து கொண்டே இருப்பார்கள் என்றும் மத நம்பிக்கை என்ற பெயரில் பலர் ஏமாந்து விடுவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu