குமரி மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் பெரும் கவலை

குமரி மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் பெரும் கவலை
X
குமரியில் விவசாயத்திற்கு தேவையான உரம் கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கன்னிப்பூ, கும்பப்பூ என்ற இருபோக நெல் சாகுபடி நடைபெறும், அதன்படி இந்த வருடம் கன்னிப்பூ சாகுபடி கடந்த மே, ஜூன் மாதங்களில் தொடங்கியது.

பூதப்பாண்டி, அருமநல்லூர், புத்தேரி உட்பட மாவட்டம் முழுவதும் 5,742 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் முதலில் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கன்னிப்பூ நெல் அறுவடை பணிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த மாதம் 15 ம் தேதியுடன் கன்னிப்பூ அறுவடை பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்து கும்பப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் உரம் வாங்க சென்றால் உரம் தட்டுப்பாடு என கூறி நான்கில் ஒரு பங்கு உரத்தை மட்டுமே தருவதாகவும் ஏற்கனவே பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்தாலும் நெல்லுக்கு போதிய பணம் கிடைக்காததால் அழிவை சந்தித்து வரும் நாங்கள் உரம் தட்டுப்பாட்டால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் விவசாய நிலங்களுக்கு ஏற்ப உரம் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு