கன்னியாகுமரியில் வேலைநிறுத்த போராட்டத்தால் பயணிகள் பரிதவிப்பு

குமரியில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட பஸ்களால், பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுத்தல் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், இன்று மற்றும் நாளை நாடு தழுவிய பொதுமுடக்க போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 780 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 116 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து, கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பல மணி நேரமாக பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருந்த நிலையில் பேருந்து நிலையத்திற்கு வரும் ஒரு சில பேருந்துகளில் முண்டியடித்து கொண்டு ஏற முயன்றதால் போலீசார் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதனால், இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, பேருந்து நிலையத்தில் பேருந்திற்க்காக பல மணி நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதியவர்களும் குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதே போன்று நகரப் பேருந்துகளும் 10 சதவீத அளவிலேயே இயக்கப்பட்டதால் இன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu