நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
X

பைல் படம்.

ஒன்றரை பவுன் நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட். இவர் வெளிநாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில், அவரது மனைவி சகாய சிலஜா தனது 4 வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகளுடன் கடியப்பட்டனம் மீனவ கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஜோகன் ரிஷி மாயமானார். இதனை தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இதுகுறித்து மணவாளகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுவனின் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாத்திமா என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதனிடையே பாத்திமா தான் சிறுவனை கடத்தி வைத்துள்ளதாக தகவல் பரவிய நிலையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாத்திமாவின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

அப்போது வீட்டில் இருந்த பீரோவும் அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது பீரோவினுள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி உடல் அசைவின்றி காணப்பட்டார். இதனை தொடர்ந்து சிறுவனை மீட்ட பொதுமக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பாத்திமா மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் அணிந்து இருந்த ஒன்றரை பவுன் நகைக்காக அவரை கொன்றதும், இரவோடு இரவாக சிறுவன் உடலை கடலில் வீச பாத்திமா திட்டமிட்டதும் இதற்கு அவரது கணவர் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது கணவர் சரோபியை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறு பரிசோதனைக்கு பின்னர் சிறுவன் ஜோகன் ரிஷியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!