சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையம்
குமரியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் பழைய காவல் நிலையம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய வணிக இடமாக மாறி வரும் பகுதியான புதுக்கடை பகுதியில் பேருந்து நிலையம், மீன் சந்தை, தபால் நிலையம், கிறிஸ்த்தவ ஆலயம் உள்ளிட்டவை ஒன்று சேர இருக்கும் முக்கிய சந்திப்பு பகுதியில் போதிய இடவசதி இல்லாமல் இயங்கி வந்தது புதுக்கடை காவல்நிலையம்.
இதன் காரணமாக சந்திப்பு பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2014 ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டது.
அதன்பிறகு சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வந்த காவல்நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ஆய்வாளர் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டு அந்த அலுவலகத்திற்குள் காவல்நிலைய கோப்புகள் பாதுகாத்து வைக்கபட்டிருந்தது.
நாளடைவில் இந்த இடத்தை குறித்த எந்த எண்ணமும் யாருக்கும் இல்லாமல் போகவே இந்த கட்டிடம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் புற்கள் மண்டி காடு போல் காட்சி அளித்தது.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள் அருகில் இருக்கும் மதுக்கடையில் இருந்து மதுபானம் வாங்கி வந்து இந்த கட்டித்திற்குள்ளேயும் வெளிப்புறங்களிலும் அமர்ந்து மது குடிப்பது சத்தம் போடுவது சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் தபால் நிலையம் சந்தை உள்ளிட்டவற்றிற்கு பெண்கள் தனியாக வந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
அதேபோன்று வழிப்போக்கர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி செல்லும் விடுதியாகவும் மாறி உள்ளது, மேலும் பேருந்து நிலையத்திற்குள் பயணிகள் பேருந்து ஏற நிற்கும் இடத்திலேயே மதுபாட்டில்களை திறந்து வைத்து மது அருந்துவது போதை அதிகமானால் அரைகுறை ஆடைகளுடன் சாலையிலும் பேருந்து நிலையத்திலும் விழுந்து கிடப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் ஒரு சில சமூக விரோதிகள் பாழடைந்து கிடக்கும் காவல்நிலைய கட்டிடத்திற்குள் பெண்களை அழைத்து வந்து உடலுறவு கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே யாருக்கும் பயனில்லாமல் கிடக்கும் இடத்தை மறு சீரமைப்பு செய்து அதனை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நிறுவி மக்களின் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டும் என்றும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu