குமரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 525 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடல் தொழில் செய்வதற்கு தமிழக அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது.
இந்த மண்ணெண்ணெயை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு தொழிலுக்கு செல்லும் ஒரு சில மீனவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று நள்ளிரவு வேளையில் ஒரு சொகுசு வேனில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்வது போன்ற போர்வையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்களில் சுமார் 525 லிட்டர் மண்ணெண்ணெயை ரகசிய வழியாக கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்த ரகசிய தகவல் நித்திரவிளை போலீசாருக்கு கிடைத்ததை தொடர்ந்து கிராத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு வேனை தடுத்து நிறுத்திய போலீசார் வேனின் பின்பக்க டிக்கியில் சோதனை செய்த போது அதனுள் நாட்டு படகிற்கு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்ணெண்ணெய் கேன்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த சொகுசு வேனை ஆட்களுடன் காவல்நிலையம் கொண்டு வந்து அதில் இருந்த மண்ணெண்ணெய் மற்றும் வேனை பறிமுதல் செய்து சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆன்டணி என்பவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த வாகனம் போலீசாரால் பிடிக்கப்பட்ட தகவல் அறிந்து அரசியல் கட்சியினர் முதற்கொண்டு பலரும் காவல்நிலையம் வந்து வாகனத்தை விடுவிக்க போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu