காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு…
தமிழக முதல்வர் ஸ்டாலின். (கோப்பு படம்).
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையின் உரிமையாளர் சுதர்சன் (31) உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடிவிபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு:
இதற்கிடையே, காஞ்சிபுரம் வெடிவிபத்து தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
காஞ்சிபுரம் ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் இன்று (22.3.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பூபதி (வயது 57), முருகன் (வயது 40), சசிகலா (வயது 35), தேவி (வயது 32), சுதர்சன் (வயது 31), வித்யா (வயது 30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் கடும் காயமடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ரூ. 2 லட்சம் நிவாரணம்:
காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பட்டாசு ஆலை விபத்துச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu