அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் கலெக்டர்

அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் கலெக்டர்
X

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டு செய்தி குறிப்பில் ,

காஞ்சிபுரம் மாவட்ட நகர்புற மற்றும் ஊராட்சி பகுதிகளில் பிரதான சாலைகள், இணைப்பு சாலைகள், சாலை சந்திப்புகள், சாலையின் மையப்பகுதிகள், பொது இடங்கள் உள்ளிட்ட அரசு, தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் இடங்கள் மீதும் விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் போன்றவை அமைப்பதற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு விளம்பர கட்டணம் செலுத்த வேண்டும்.

அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விளம்பரங்கள் முறைகேடான விளம்பரங்கள் ஆகும். அரசு அலுவலர்களின் கண்காணிப்பின்றி அமைக்கப்படும் முறைகேடான விளம்பர கட்டமைப்புகளால், வாகன ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படவும் வழி வகுக்கின்றன.

எனவே முறையான அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், அனுமதியின்றி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத விளம்பர பலகைகள் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story