'மிக்ஜம்' புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்! மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம்
மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு செய்தபோது
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த இரு நாட்கள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய், காவல், தீயணைப்பு, மின் வாரியம் உள்ளிட்ட 11 துறை அதிகாரிகள் அடங்கிய, 21 மண்டல குழுக்கள் பணியாற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவிற்குட்பட்ட கொளப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், ஆதனுார், மலையம்பாக்கம் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
குன்றத்துார் தாலுகாவில் மழைநீர் தேங்கிய இடங்களை சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மழைநீர் வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினர்.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் வெளியேற்றத்தையும், வரதராஜபுரம் பகுதியில் வெளிவட்ட சாலையில் ரெடிமேட் கால்வாய் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் செல்வகுமார், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு, திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரு தினங்களுக்கு, கன மழை பெய்யும் என்பதால், அனைத்து மண்டல குழுக்களும் தயார் நிலையில் இருக்க, ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். மழை நீர் தேங்குமிடங்களில், உள்ளாட்சி நிர்வாகங்களின் மூலமாக, தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தில் மழை நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்படும் மக்களை, தற்காலிக முகாமில் தங்க வைக்க, 1,442 மழை பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, மழைக்காலத்தில் மின் தடை ஏற்படும் நேரங்களில், ஜெனரேட்டர்கள் மூலமாக மின் மோட்டாரை இயக்கி தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஒன்றிய ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால், மணல் மூட்டைகள் மற்றும் மணலை அள்ள காலி கோணி பைகள் என, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுதுவிர, மழைநீர் தேங்கிவிட்டால், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் ஜே.சி.பி., என, அழைக்கப்படும் மண் அள்ளும் இயந்திரம் மற்றும் நீரில் சென்று மண்ணை அள்ளும் இயந்திரம், சவுக்கு கட்டை, புகை அடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகள் தயார் நிலையில், இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த, 'மிக்ஜம்' புயல் தாக்கினாலும் ஓரிரு நாளில் சரி செய்யக்கூடிய அளவிற்கு பேரிடர் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, உள்ளாட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வழி வகை செய்யப்பட்டு உள்ளது என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'மிக்ஜம்' புயல் பாதிப்பால், ஊராட்சிதோறும் தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு, ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சேதமடையும் ஏரிகளுக்கும் தடுப்பு நடவடிக்கைக்கு, மணல் மூட்டைகள், சவுக்கு கட்டை, ஜே.சி.பி., இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயலுக்கு முறிந்து விழும் மரக்கிளை வெட்டுவதற்கு மரம் அறுக்கும் உள்ளிட்ட இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, உள்ளாட்சிகளில் ஏற்படும் இடர்பாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu