காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு ஆண்டுகளில் 40 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு ஆண்டுகளில் 40 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
X

கோப்புப்படம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு ஆண்டுகளில் மட்டும் 40 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன; 19 இடங்களில் திருமணம் முடிந்த பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும், உயர்கல்வி போன்றவற்றில் வளர்ந்த மாவட்டமாக உள்ளது. இருப்பினும் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் மாவட்டமாக இருப்பது, குழந்த நல அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்திவருகிறது.

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளில், பாலியல் பிரச்னைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதுபோல், குழந்தை திருமணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குழந்தை பருவத்திலேயே திருமணம் நடைபெறுவதால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புக்கு பெண் குழந்தைகள் ஆளாகின்றனர்.

குழந்தை திருமணங்களை தடுக்க, நகர்ப்புறங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காட்டிலும், கிராமப்புறங்களில் குறைவாகவே நடைபெறுகிறது. இதன் காரணமாகவே, அதிக எண்ணிக்கையில் கிராமங்களில் குழந்தை திருமணம் நடந்தபடியே உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், 2022ம் ஆண்டில், 31 குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இதில், 21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 சம்பவங்களும், திருமணம் முடிந்த பின் புகார் வந்துள்ளன. குழந்தை திருமணம் நடத்திய பெற்றோர், மாப்பிள்ளை என அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 2023ல், 28 குழந்தை திருமண புகார்கள் குழந்தை பாதுகாப்பு அமைப்புகளான சைல்டு லைன், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்றவைக்கு வந்துள்ளன. இதில், 19 திருமணங்கள் முன்னதாகவே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 9 சம்பவங்களில், திருமணம் முடிந்த பின் புகார் வந்துள்ளன. கள ஆய்வு செய்த அதிகாரிகள், பெற்றோர், மாப்பிள்ளை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கிராமந்தோறும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும். அதில், குழந்தை திருமணம், பாலியல் சீண்டல், குழந்தை தொழிலாளர் என குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், சட்ட நடவடிக்கை குறித்தும் அனைவருக்கும் எடுத்து கூறப்படும். ஆனால், இக்கூட்டம் பெரும்பாலான கிராமங்களில் நடைபெறுவதில்லை. ஊர் தலைவர்களே, குழந்தை திருமணங்களை முன்னின்று நடத்துவதால், சில இடங்களில் போராடி குழந்தை திருமணங்களை நிறுத்த வேண்டியிருப்பதாக, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், குழந்தை திருமணம் தொடர்பாக, சைல்டு லைன் அமைப்புக்கு 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக் குழுமம், சமூக நலத்துறை, போலீஸ், தாசில்தார் என முக்கிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலேயே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சில கிராமங்களில், 15, 16 வயதுடைய குழந்தைகளுக்கு கூட திருமணம் செய்ய முயல்கின்றனர். இதற்கு, ஊர்த் தலைவர், கிராம மக்களே துணையாக உள்ளனர்.

குழந்தை திருமணத்திற்கு துணையாக உள்ள உறவினர்கள், திருமணத்தில் பங்கேற்றோர் உள்ளிட்டோர் மீதும் சட்ட நடவடிக்க எடுக்க வழிவகை உள்ளது. ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

18 வயதுக்குள் பெண் குழந்தையை திருமணம் செய்து, பாலியல் ரீதியாக உறவு வைத்தால், 'போக்சோ' சட்டத்தில் மாப்பிள்ளை கைது செய்யப்படுவார்.

பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். திருமணம் செய்ய விரும்பாத பெண் குழந்தை, காப்பகத்தில் தங்க வேண்டும் என விரும்பினால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணம் பற்றி, பள்ளி மாணவியருக்கும், பொது இடங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று கூறினர்.

Tags

Next Story
கார் ஆடியோவுடன் புளூடூத் இணைக்க முடியவில்லையா? இதோ தீர்வுகள்!