சங்கராபுரம் பகுதியில் தோட்டக்கலைதுறை திட்டங்கள்: கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு
சங்கராபுரம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா வடசிறுவள்ளூர் மற்றும் பூட்டை கிராமங்களில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் ரூ.2லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறை மற்றும் வீரிய ஒட்டு ரகம் பப்பாளி ஒரு ஹெக்டர் பரப்பில் அரசு தோட்டக்கலை பண்ணையின் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள ஆறு மாத பப்பாளி தோட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பப்பாளி பயிர் சாகுபடி முறை, பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மகசூல் நிலை, பப்பாளி பழங்கள் தரம் பிரித்தல் மற்றும் விற்பனை செய்யும் சந்தை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்திட தேவையான ஆலோசனைகளை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் வழங்கிட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பூட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50 சதவீதம் மானியம் ரூ.50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிப்பிகாளான் உற்பத்தி கூடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். காளான் உற்பத்திமுறை, சந்தை நிலவரம் மற்றும் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து விவசாயியிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களால் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம், வீரிய ரக காய்கறி விதைகள், கத்திரி, மிளகாய், வெண்டை, பூசணி, பாகல், புடலை, மா, வாழை, மசள், சம்பங்கி, மல்லி, கோலியஸ் ஆகிய பயிர்களுக்கு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கணேசன், உதவி இயக்குநர் முருகன், அலுவலர் சக்திவேல், உதவி அலுவலர்கள் வேலன், ராஜேஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu