ரிஷிவந்தியம் பேரூராட்சியாவது எப்போது?: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அரசியல் காரணங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு வளர்ச்சி அடையாமல் உள்ளது. ரிஷிவந்தியம் ஊராட்சியின் மொத்த பரப்பளவு 1,175 ஹெக்டேர் ஆகும். போலீஸ் நிலையம், வங்கிகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், சமுதாயகூடம் ஆகியவை இங்குள்ளன.
ஊராட்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வீட்டு வரி தொழில் வரி , பல்வகை வரி என ஆண்டுதோறும் 22 லட்சம் ரூபாய் வரை ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. தற்போது, மக்கள் தொகை பெருக்கத்தால், ரிஷிவந்தியம் விரிவடைந்து குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன.
சட்டசபை தொகுதிக்கும், ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலைமையகமாக உள்ள ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய், சாலை, பஸ் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பி.டி.ஓ., மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்களைப் பெற்று பயனடைய 25 கி.மீ., தொலைவில் உள்ள பகண்டைகூட்ரோட்டிற்கும், தாலுகா அலுவலகம் சார்ந்த திட்டங்களைப் பெற 35 கி.மீ., தொலைவில் உள்ள சங்கராபுரத்திற்கும் செல்லவேண்டியுள்ளது. ரிஷிவந்தியத்தில் இருந்து போதிய பஸ் வசதியும் இல்லை. இதனால் பண செலவு, கால விரயம், அலைச்சல் போன்றவற்றால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே ரிஷிவந்தியம் மற்றும் சுற்று வட்டார ஊராட்சிகளான பாசார், முனிவாழை, வெங்கலம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கூறினர்.
சட்டசபை கூட்டத் தொடரில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu