ரிஷிவந்தியத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்கள் மோதல்: ஒருவர் சாவு
கடம்பூர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மோதிக்கொண்டதில் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது .இதில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அக்டோபர் 6ம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இரண்டு முறை வெற்றி பெற்று தலைவராக பதவி வகித்த வைத்தியநாதன் என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த இந்திராணி குழந்தைவேலு என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து கடும் போட்டி இருந்து வந்தது.
இரண்டு வேட்பாளர்களுக்கு தங்கள் ஆதரவாளர்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றிபெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பஸ் நிறுத்தம் அருகே வைத்தியநாதன் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர் .அப்போது எதிர் வேட்பாளர் இந்திராணி குழந்தைவேலு ஆதரவாளர்கள் காரில் பஸ் நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தனர். அப்போது வேட்பாளர் வைத்தியநாதன் ஆதரவாளர்கள் மீது வாகனத்தை ஏற்றவேண்டும் என்ற நோக்கில் படுபயங்கரமாக மோதியதாக வைத்தியநாதன் வேட்பாளர் தரப்பு கூறினார்கள்.
இதில் கார் வேகமாக மோதியதில் வீராாச்சாமி வயது 40 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதற்கு நியாயம் கேட்டு வைத்தியநாதன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu