மக்களவை தேர்தல்: கள்ளக்குறிச்சி தொகுதி ஒருபார்வை!

மக்களவை தேர்தல்: கள்ளக்குறிச்சி  தொகுதி ஒருபார்வை!
X
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த 5 தேர்தல்களில் 4 முறை திமுக-வும், ஒரு முறை அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளன.

வடதமிழகத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கள்ளக்குறிச்சி நகரம். விவசாயம், குச்சி வள்ளிக் கிழங்கில் மாவு தயாரித்து அதன் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலமான ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை என கலவையான சமூக, பொருளாதார, நிலவியல் முகம் கொண்டது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.

நில அமைப்பில், காடு, மலை, ஆறு என்று மாறுபட்ட தன்மைகளை தன்னகத்தில் கொண்டுள்ளது இத்தொகுதி. தலித்துகள், வன்னியர்கள், பழங்குடியினர், உடையார்கள், கார்காத்த வேளாளர்கள், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் என்று பல சாதிப்பிரிவினர் இத்தொகுதியின் வெவ்வேறு பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இது தவிர முஸ்லிம்கள், கிறித்துவர்கள் ஆகிய மதச் சிறுபான்மையினரும் கணிசமாக உண்டு.

ஆக, நிலம், மக்கள், தொழில், நிர்வாக அமைப்பு என்று எல்லா வகையிலும் நிலவும் பன்முகத் தன்மையே இந்தத் தொகுதியின் அடையாளம்.

மிகப் பெரியதாக பரந்து விரிந்திருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி தலைமையில் மாவட்டத்தை உருவாக்கவேண்டும் என்ற நீண்ட நெடுநாளையை கோரிக்கையை ஒரு வழியாக ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசு.

1967, 1971 ஆகிய இரண்டு தேர்தல்களில் முன்பு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இடம் பெற்றிருந்தது. அந்த இரண்டு முறையும் திமுக-வை சேர்ந்த எம்.தெய்வீகன் வெற்றி பெற்றார். பிறகு இந்த தொகுதியில் தற்போது இடம் பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிகள் கடலூர், ராசிபுரம் மக்களவைத் தொகுதிகளில் நீண்டகாலம் இடம் பெற்றிருந்தன.

மறுவரையறையில் மீண்டும் 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் திருக்கோயிலூரைச் சேர்ந்தவரான திமுக-வின் ஆதி.சங்கர் பாமக-வின் கே.தனராஜுவை தோற்கடித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக-வின் கே.காமராஜ் வெற்றி பெற்றார். திமுக-வின் ஆர். மணிமாறன் தோற்றார்.

ஆக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த 5 தேர்தல்களில் 4 முறை திமுக-வும், ஒரு முறை அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த மூன்றாண்டுகளாக போதிய மழை இல்லாததால், கள்ளக்குறிச்சியை ஒட்டி அமைந்துள்ள கோமுகி அணைக் கட்டு, மணிமுத்தாறு அணைக்கட்டு இரண்டும் வறண்டு போயுள்ளன. அத்துடன், இந்த வறட்சியால் குச்சி வள்ளிக்கிழங்கு உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, அது சேகோ (ஜவ்வரிசி) தொழிற்சாலைகளையும் பாதித்துள்ளது. இத்துடன், ஜி.எஸ்.டி வரியினால் ஏற்பட்ட பாதிப்பும் இணைந்து சேகோ தொழில் நிறுவனங்களை தள்ளாட வைத்துள்ளன.

வேளாண்மையிலோ, சோகோ தொழிற்சாலை எனும் வேளாண் சார் தொழிலிலோ போதிய வேலைவாய்ப்பு பெருகாத காரணத்தால் வேளாண் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து பெங்களூருக்கும், கேரளாவுக்கும் கூலி வேலைக்காக சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பழைய அலகு அங்கிருந்து நெடுந்தொலைவில் தென்பெண்ணை கரையில் உள்ள மூங்கில்துறைப்பட்டில் அமைந்துள்ளது. இது தொகுதிக்கு வெளியே உள்ளது. மற்றோர் அலகு கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயபாளையத்தில் அமைந்துள்ளது.

கரும்பு விவசாயம் ஓரளவு வெற்றிகரமாக நடக்கிறது. கல்வராயன் மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைப்பதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அது நடக்கவில்லை.

வேளாண் நெருக்கடிகள், மாவட்ட உருவாக்கம் பற்றிய அறிவிப்பு, சேகோ தொழில் நசிவு ஆகியவை இந்த தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் உள்ளூர் காரணிகளாக இருக்கும்.

கள்ளக்குறிச்சிக்கு ரயில் இணைப்பு கோருதல், வேளாண்மை சார்ந்த தொழில்களை மேம்படுத்துவது போன்றவை மக்களின் எதிர்பார்ப்பு.

இத் தொகுதியில் 15,11,972 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,50,610 பேர் ஆண்கள், 7,61,191 பேர் பெண்கள், 171 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

2014 இல் காமராஜ் அதிமுக சார்பிலும், 2019இல் கௌதம் சிகாமணி திமுக சார்பிலும் வெற்றி பெற்றனர்.

தற்போதைய 2024 தேர்தலில் திமுக சார்பில் மலையரசன், பாமக சார்பில் தேவதாஸ் உடையார், அதிமுகவில் குமரகுரு போட்டாயிடுகிறார்கள்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி