உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு: விழாக்கோலம் பூண்டது கிராமங்கள்

உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு: விழாக்கோலம் பூண்டது கிராமங்கள்
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்றதால் கிராமப் புறங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாகி முதன் முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், சின்னசேலம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருநவாலுார், திருக்கோவிலுார், கல்வராயன்மலை ஆகிய 9 ஒன்றியங்களை கொண்டுள்ளது.

இதில், 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சி தலைவர்கள், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்று, 9 சேர்மன் பதவிகளையும் தக்க வைத்து கொண்டது.

ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., -145, அ.தி.மு.க.,- 16, சுயேட்சை 10, மற்ற கட்சிகள்-9 என வெற்றி பெற்றது. அதேபோல், 19 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளையும் தி.மு.க., பிடித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவியேற்பு இன்று 20ம் தேதி நடைபெற்றது.

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சிலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலும் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.அதேபோல், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளாட்சி பிரநிதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட சேர்மன், துணை சேர்மன் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று நடக்கும் பதவியேற்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மட்டுமே மறைமுக தேர்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் இன்று பதவியேற்றதால், கிராமப் புறங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags

Next Story