பருவமழை மின் விபத்துகளைத் தடுக்க 24 மணி நேர சேவை மையம் துவக்கம்

பைல் படம்.
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. பருவ மழை காலங்களில் வெள்ள சீற்றம், இடி மின்னல் போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதேபோல், மின் விபத்துகளால் உயிர் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மின்வாரிய அதிகாரிகள் பருவ மழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அருட்பெரும்ஜோதி கூறுகையில், பருவ மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது மின் விபத்தினை தடுக்கவும், உடனடியாகவும் நிவர்த்தி செய்யவும் மின் தளவாட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மின் தடை, மின் பொருட்கள் சேதம் மற்றும் மின் விபத்து குறித்து தகவல் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் சேவை மையத்தில் 94458 55822 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மின் கம்பி அறுந்தும், கம்பம் சாய்ந்தும் கிடந்தால் அதனருகில் செல்லக்கூடாது. மழை வெள்ளம் வீட்டிற்குள் புகும்போது மின்கசிவு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, மின்சாதன பொருட்களை உயரமாக பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.
கால்நடைகளை மின் கம்பம், ஸ்டே கம்பிகளில் கட்ட கூடாது. அதேபோல், பள்ளி செல்லும் சிறுவர்கள் வழியில் அறுந்து கிடக்கும் மின் கம்பி, உடைந்த மின் கம்பம் போன்றவற்றை தொடுதல் கூடாது என்றும், குறுக்கு வழி பாதையினை தவிர்த்து சாலை வழியாகவே செல்ல வேண்டும் என பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், பலத்த காற்று மழையில் கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்லவும், அறுந்து கீழே விழுந்து கிடக்கவும் வாய்ப்புள்ளது. அப்போது விவசாயிகள் பாதுகாப்புடன் செயல்படுவது மட்டுமின்றி, மின்வாரிய அலுவகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நிலத்தில் மின் வேலிகள் அமைக்கும் விவசாயிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும், குடிநீர் தொட்டி, மினி பம்புகள் ஆகியவற்றை கவனமுடன் இயக்க வேண்டும். மின் கம்பத்திற்காக பொருத்தப்பட்ட ஸ்டே ஒயர்கள் மேல் கயிறு கட்டி துணிகள் உலர வைக்க கூடாது.
குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில் சுவிச்சுகளை பொருத்தக் கூடாது. மேலும், இடி, மின்னலின்போது மரத்தின் அடியிலும், பஸ் நிறுத்த நிழற்குடையிலும் தஞ்சம் அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu