தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வேளாண் பணிகள் தீவிரம்
திருக்கோவிலூர் பகுதியின் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
கர்நாடக மாநிலம், நந்திமலையில் இருந்து உருவாகும் தென்பெண்ணையாறு, 430 கி.மீ. துாரம் கடந்து கடலுாரில் கடலில் கலக்கிறது. தமிழக எல்லையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைக் கடந்து சென்றாலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் விவசாயிகளின் உயிர் நாடியாகவும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இதன் குறுக்கே தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணைகள் உள்ளது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த அணைகள் நிரம்பி வழியும். அடுத்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் முப்போக சாகுபடி மேற்கொள்ள வழிவகுக்கிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள சூழலில், தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததன் காரணமாக சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119 அடி, கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.இதில் தற்போது, 97.45 அடி நீர் நிரம்பியுள்ளது.
கடந்த 1958ம் ஆண்டு அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுதான் மதகுகளில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன்காரணமாக 97.45 அடி மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இதற்கு மேல் வரும் தண்ணீர் முழுதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருக்கோவிலுார் அணைக்கட்டில் நேற்று வினாடிக்கு 950 கன அடியாக நீர் வரத்து இருந்தது.
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பம்பை வாய்க்கால், ராகவன் வாய்க்கால், மலட்டாறு, சித்தலிங்கமடம் வாய்க்கால்களில் 700 கனஅடி தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. ஆற்றில் 250 கனஅடி சென்று கொண்டிருக்கிறது. கடலுார் வரை செல்லும் மலட்டாற்றின் கரைகள் பலவீனமாக இருப்பதால், ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக முழு கொள்ளளவு தண்ணீரையும் வாய்க்கால்களில் பிரித்து அனுப்ப முடியாத சூழல் உள்ளது.தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்தே ஆற்றில் நீர்வரத்து அமைவதால் அவ்வப்போது திடீரென தண்ணீர் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் திருக்கோவிலுார் அணைக்கட்டிலிருந்து திருப்பி விடப்படும் தண்ணீர் 95 ஏரிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இதன் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் பருவமழை அதிகரித்தால் தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu