5 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய பெரிய ஏரி: ரிஷிவந்தியம் விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி வழியும் ரிஷிவந்தியம் பெரிய ஏரி.
ரிஷிவந்தியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 175 ஏக்கர் பரப்பிலான பெரிய ஏரி உள்ளது. ரிஷிவந்தியம் வனப்பகுதியில் பெய்யும் மழைநீர், பெரிய ஏரிக்கு வரும் வகையில் நீர் வரத்து வாய்க்கால் உள்ளது. மழைக்காலங்களில் பெரிய ஏரி நிரம்புவதன் மூலம் அருகில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பயனடையும்.
மேலும், உபரி நீர் அருகில் உள்ள வெங்கலம், முனிவாழை, உன்னேரி, பிரிவிடையாம்பட்டு, காட்டுஎடையார் ஆகிய கிராம ஏரிகளுக்கு சென்று, கெடிலம் ஆற்றில் கலக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷிவந்தியம் பெரிய ஏரி நிரம்பியது. தற்போது இந்த ஏரியில் 50 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பில் உள்ளது. அப்பகுதியில் விளைநிலம் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர்.
ஏரி வரத்து வாய்க்கால் முழுதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் வனப்பகுதியில் இருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும், ஏரி மதகுகள் சேதமடைந்ததால் தண்ணீர் கசிவு இருந்தது. இது போன்ற பல்வேறு காரணங்களால் ஏரி நிரம்பாமல் இருந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் ஏரி முழுவதுமாக நிரம்பி, உபரி நீர் கோடி வழியாக வெளியேறி அருகில் உள்ள ஏரிகளுக்கு சென்றது. நடப்பாண்டு நவம்பர் மாத தொடக்கத்திலேயே ஏரி நிரம்பியதாலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு கோடி வழியாக நீர் செல்வதாலும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu