கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்: மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடம்
கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். ஆனாலும் விடுதலையாகி வந்து மீண்டும் சாராயம் காய்ச்சுவதையே தொழிலாக செய்து வந்துள்ளார்.
டாஸ்மாக் கடையில் மதுபானம் விலை அதிகம் என்பதால் பல மதுப்பிரியர்கள் வழக்கமாக இவரிடமே மது வாங்கி குடித்து வந்துள்ளனர். கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை தோடர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில்தான் நேற்று அந்த பகுதி மக்கள் குடித்த கள்ளச்சாராயத்தால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அன்று இரடெ 17 பேர் உயிரிழந்தனர்.
நேரம் செல்லச் செல்ல நள்ளிரவில் அதன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகாலையில் 29 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 49 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று அதிகாலை உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 47 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஏற்கெனவே 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல்வரை நேரில் சந்தித்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பான கள நிலவரங்களை விளக்க உள்ளனர்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்க உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் மற்றும் மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu