கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்
பிறர்க்கென முயலுநர் உண்மையின், இவ்வுலகம் உளதாயிருக்கின்றது.
"இவராலேயே சிறப்புடன் வாழ்கிறது இந்த உலகம்" என்று புறநானூறு போற்றிய மாமனிதராக நம் கண்முன் வாழ்ந்து காட்டியவர் கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம். நூறு ரூபாய்க்கு தானம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்யும் அவலங்களை அன்றாடம் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இவர்கள் மத்தியில் பல கோடி ரூபாயை மக்களுக்கு செலவு செய்து விட்டு சத்தமில்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சுப்ரமணியம், அவரது கொடைத்தன்மைகள் ஏராளம்.
இவரது மறைவுக்கு கோவை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே நேரத்தில் அவரது கொடைத்தன்மை பற்றியும் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் சத்தமில்லாமல் செய்த சாதனை, கொடைத்தன்மை பற்றி கோவை மாவட்ட மக்கள் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர் .
கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. பார்த்த நமக்கு பிரமிப்பை ஏற்படுதும். வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்க வேண்டும். ஒரு நபருக்கு ரூபாய் 20 மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது.
அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும். அவ்வளவு சுறுசுறுப்பு, அர்ப்பணிப்பு. ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்கள் வரை வயிறார சாப்பிடுவது தெரிய வந்தது. தமிழகத்தின் பெரிய தொழில் நகராக விளங்கும் இந்த ஊரில் பல ஊர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு புகலிடமாக விளங்கியது. இதனை நிறுவிய சுப்பிரமணியம், சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் திருமதி சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வந்தார் .
தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்று அதில் உணவருந்தியவர்கள் சொல்ல்கின்றனர்.
ரூ.20க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் ஆகாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது. ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது. உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள்.
1980- 90களில் கோவை சுற்று பகுதிகளில் பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள், வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தனி உதவித்தொகை வழங்கினார். 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புகு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பலருக்கு கல்வி உதவித்தொகை கொடுத்தார். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டதே இல்லை. இவரது உதவியாளர்களே வந்து உதவித்தொகையினை வழங்கினார்கள். அதிலும் இவரைப் பற்றிய பாராட்டு பேச்சு, இவரது புகைப்படம் எதுவும் இருந்ததில்லை . பொது சேவையிலும், தனிபட்ட வாழ்விலும் , தொழில் வளர்ச்சியிலும் தன்னிகரற்று விளங்கினார்.
சாந்தி கியர்ஸ் கேண்டீனில் பல்வேறு வகையான சிற்றுண்டிகளும் விற்கப்படுகின்றன. மைதாமாவில் எந்தவிதமான பதார்த்தங்களும் செய்வதில்லை.காலை 4.30 மணி முதல் 200க்கும் மேற்பட்டோர் நடைபெயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிறகு 6 மணி முதல் கம்பங்கூல், சூப் அருகம்புல், கீரை, மனத்தக்காளி மற்றும் மற்றும் ஜூஸ் வகைகள் மாதுளை, முருங்கை, கேரட் ஜூஸ் அனைத்தும் 5 ரூபாய்க்கு ஒரு டம்ளர் என்று விற்பனை செய்கிறார்கள்.
நம் நாட்டில் உணவு , மருத்துவம், கல்வி இவை மூன்றும் ஒரு சமயம் விலையில்லாமல் அனைவருக்கும் கிடைத்தது, நாடும் அப்போது சிறந்து விளங்கியது. இன்றைய காலத்தில் உணவு , மருத்துவம், கல்வி ஆகியவற்றில் தன்னால் முடிந்த அளவு சேவை செய்து சாதித்து காட்டியுள்ளார் கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம். விளம்பரத்தை விரும்பாமல் தான் இறந்தாலும், கூட்டம் கூட்டி யாரையும் சிரமப்படுத்த கூடாது என்று சொல்லி மறைந்த உத்தமர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu