கலைஞர் 100 வினாடி-வினா போட்டி: முதல் பரிசாக ரூ. 10 லட்சம் அறிவிப்பு

கலைஞர் 100 வினாடி-வினா போட்டி: முதல் பரிசாக ரூ. 10 லட்சம் அறிவிப்பு
X
கலைஞர் 100 வினாடி-வினா இணைய தள போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னெடுப்பில், தி.மு.க. மகளிரணி சார்பில் தமிழ்நாட்டின் மாபெரும் வினாடி-வினா போட்டி அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டின் வரலாறு, திராவிட அரசியலைப் பற்றி கேள்விகள் கேட்கப்படும். kalaignar100.co.in என்கின்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு, இணையவழிப் போட்டிகளில் பங்கேற்கலாம். திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் ஒரு மாபெரும் முன்னெடுப்பு என்றும், வினாடி-வினா போட்டிக்குத் தயாராகப் படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்தும் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் பத்தாயிரம் கேள்விகளைக் கொண்ட இந்த வினாடி-வினா போட்டியில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (பொதுப்பிரிவு) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாகப் போட்டி நடைபெறுகிறது. முதலாவதாக மாவட்ட அளவிலான சுற்று. இரண்டாவதாக மண்டல அளவிலான சுற்று. மூன்றாவதாக அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று. Kalaignar100.co.in இணையத்தளத்தில் விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் இந்தப் போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.

போட்டிகள் இணையவழி சுற்றுகளாக நடைபெறும், மொத்தம் 100 விநாடிகளுக்கு 50 கேள்விகள் வரை கேட்கப்படும். மாவட்ட அளவிலான தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர்.

இணையவழி சுற்றில் வெற்றி பெறுபவர்கள், மண்டல அளவிலான இரண்டாவது நேர்முக சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். மண்டல அளவில் நேரடி குழு போட்டியாக நடைபெறும். இதில் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவர்.


சென்னையில் நடைபெற இருக்கும் அரை இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. ஒருங்கிணைப்பில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இறுதிச்சுற்று சென்னையில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு (12 அணிகளும்), 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (12 அணிகளும்) மொத்தம் 24 அணிகள் பங்குபெறுவார்கள்.

கலைஞர் 100 வினாடி-வினா, 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவினருக்கும் முதல் பரிசு தலா ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 6 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 38 லட்சத்திற்கு மேலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க .துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தி.மு.க.வின் முந்தைய களப் போராட்டங்களையும், அரசியல் புரட்சிகளையும், அதற்கு வித்திட்ட நமது முன்னோர்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூற இந்த வினாடி-வினா போட்டி பெரும் வாய்ப்பாக அமையும். பத்தாயிரம் கேள்விகளோடு 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாகப் போட்டி நடைபெறுகிறது.

இந்த வினாடி வினா போட்டியில் எல்லோரும் கலந்துகொண்டு தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம், kalaignar100.co.in என்ற இணையதளத்தில் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இணையவழி போட்டிகள் தொடங்க இருக்கிறது. வரலாற்றின் தனிப்பெரும் மக்கள் இயக்கத்தை இணையில்லா கலைஞர் நூற்றாண்டில் கொண்டாடுவோம் வாருங்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!