நீதிபதி சந்துரு அறிக்கை தமிழக அரசுக்கு மேலும் சிக்கலை தான் உருவாக்கும்: வக்கீல் கேஎஸ்ஆர்
நீதிபதி சந்துரு
ஜாதி வன்முறைகளை ஒழிக்க உடனடியாக செய்ய வேண்டியவை, நீண்டகால செயல்திட்டங்கள் என 2 விதமாக பரிந்துரைகளை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் குழு வழங்கியது. அந்த அறிக்கையில் கையில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரபல வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது திலகம் இட்டுக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் தனது அரசு ஆலோசனைக்கான அறிக்கையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சொல்லுகிறார்.
இது முற்றிலும் அபத்தமாக இருக்கிறது நாத்திகம் பேசட்டும் முற்போக்கு பேசட்டும் இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண்கள் திலகமிட்டுக் கொள்வது என்பது மரபு சார்ந்த பாரம்பரியமான வழக்கம்.
தமிழின் சங்கத் திணைகளில் கூட ஆண்கள் போருக்குச் செல்லும்போது வெற்றி பெற்று வர வேண்டும் என்று அவர்களது நெற்றியில் வீரத் திலகமிட்டு அனுப்புவதை எல்லாம் படித்திருக்கிறோம்.
அது ஒரு மங்கலத்தின் குறியீடு மட்டுமல்ல கண்ணாறுகளின் பெயரால் செல்லமும் அழகும் சேர்ந்த ஒரு கலைச்செயல். அக்காலத்தில் ஆண்கள் பெண்கள் எல்லோரும் பொட்டிட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
நீதிபதி சந்துரு அவர்கள் இத்தகைய மக்கள் வழக்காறுகளை எதோ மதக் குறியீடு என்றும் அதுவே மதஅதிகாரம் என்பது போல வகைப்படுத்துகிறார்!
இந்த அறிக்கையில் காணப்படும் பல விஷயங்களை பார்க்கும் போது என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல பலருக்கும் மிகுந்த அபத்தமாகவும் நடைமுறைக்கு பொருந்தாத தான் தோன்றித்தனமான மிகைமதிப்பீடுகளாகத்தான் புரிந்து கொள்ளப்படும்..
தன்னைக் கம்யூனிஸ்ட் காரர் என்று சொல்லிக் கொள்ளும் முன்னாள் நீதிமான் சந்துரு அவர்களுக்குத் தெரியாதா?
இந்தியாவைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வந்த பெண்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் மனைவிமார்களும் பொட்டிட்டுக் கொள்வது இல்லையா? தோழர் பிரகாஷ் காரந்துடைய மனைவி பிரந்த, உ. வாசுகி நெற்றியில் திலகம் கொண்டு தானே பொதுவெளிகளுக்கு வருகிறார்!
தமிழ்க் கவிதைகளை எழுதி வந்த பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார் போன்ற பலரும் நெற்றியில் திலகம் இட்டு வாருங்கள் என்று தான் சொல்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? இப்படியான ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட் அறிக்கைகளால் தான் இங்கே ஜாதிக் கலவரம் மதக் கலவரம் போன்றவை மேலும் தூண்டப்படுகின்றன.
நான் ஏற்கனவே பல முறை சொன்னது மாதிரி இந்துக் கோவில்களில் ஆறு கால பூஜைகள் நடக்கட்டும் மசூதிகளில் பாங்கு ஓதி தொழுகை நடக்கட்டும். கிறிஸ்தவ தேவாலயங்களில் மணியோசைகளுடன் பிரார்த்தனைகள் நடக்கட்டும். சீக்கிய வழிபாட்டுத் தலங்களில் கிரந்தங்கள் ஓதப்படட்டும்.. இப்படி அவரவர் நம்பிக்கைகள்ப் பிரகாரம் அவர்களுடைய வழக்கங்களும் வழிபாடுகளும் நிகழட்டும்.
அப்படித்தானே பல காலமும் இருந்து வந்திருக்கிறது!.இதில் குறுக்கீடு செய்வதன் மூலம் ஒருவர் என்ன அடைய நினைக்கிறார்.
பண்பாட்டுக் கலாச்சாரங்களில் தலையிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா பல்வேறு நாகரிகங்கள் கொண்ட தொன்மையானது. சந்துரு சொல்வது மாதிரி பொட்டிட்டுக் கொள்வது வெறும் அடையாளங்கள் சார்ந்தவை மட்டுமல்ல! பல தொன்ங்களையும் சடங்கியல்களையும் உள்ளடக்கியது.
அவற்றை எல்லாம் பகுத்தறிவுக்குள் கொண்டு வரும்போது அது குறிப்பாக யாரை நோக்கி குறி வைக்கப்படுகிறது என்பதுதான் இங்கு அரசியல் ஆகிறது மட்டுமல்ல பல பிரச்சனைகளுக்கும் காரணம் ஆகிறது.
அரசியலை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும்! இந்த வழக்காறுகள் மேல் கை வைக்க கூடாது! தனது சொந்தக் கருத்தாக இருந்தாலும் கூட அதைச் சூழலின் மீதான நடைமுறை மற்றும் நடுநிலையோடு தான் முன்வைக்க வேண்டும்.
இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்வதையே நான் தவறு என்கிறேன். இது உண்மையில் ஒரு மத நல்லிணக்க நாடு! (Communal harmony not secular) எல்லா மதங்களும் இங்கு உண்டு உயிர்த்து வாழ உரிமை உள்ள நாடு என்பதுதான் எனது நம்பிக்கையும் என்னுடைய நடுநிலைவாதமும்.
இதற்கு மேல் மேதமை உள்ளவர்கள் இதில் ஏதேனும் இப்படியான பிரச்சனைகளைக் கொண்டு வரும்போது உண்டாகும் முரண்பாடுகளால் ஒற்றுமைக்கு சிக்கல் வருவதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வழியில் சந்துரு இந்த அறிக்கை மேலும் சிக்கலை தான் தமிழக அரசுக்கு உண்டு பண்ணும்.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் கூட பெண்கள் பொட்டிட்டுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்..
எதையும் பரிசீலிக்காமல் அறிவார்ந்த தளத்தில் நாம் ஒன்றைச் சொல்லும் போது அது அபத்தமாகி விடுவதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது நீதி அரசர்களுக்கு மட்டுமல்ல தேச நல்லிணக்கத்தை விரும்பும் எந்தச் சாமானியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu