ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் : சிறப்பு குழு அமைப்பு

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் : சிறப்பு குழு அமைப்பு
X

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவர அமைக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்மார்ட் போன்களில், ஆன்லைன் விளையாட்டுக்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அப்படி இந்த விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழந்து, மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ளும் துயர சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி சில நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, போதிய காரணங்கள், ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டச் சட்டம் என்றும், அரசு அறிவியல் பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்து அரசு நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்தது.

உச்சநீதிமன்றதின் இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதேநேரம் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளினால் உயிரிழப்பும் தொடர்ந்த வண்ணமே இருந்தது.


இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும்,

இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக்குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் விரைவில் அவசரச் சட்டம் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!