அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி நியமனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாங்களும் கடந்த மாதம் 27ம் தேதி நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 4) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. தனித்தனியாக தீர்ப்புகளை வாசித்த நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளைக் கூறி இருக்கின்றனர்.
செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்ற நீதிபதி நிஷா பானு , அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைக் கைது செய்தது சட்டவிரோதம் எனவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதி பரத சக்கரவத்தி செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.
குறிப்பாக, காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சையைத் தொடரலாம் என்றும் மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கலாம்; ஆனால் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நாட்கள் விசாரணை கைது செய்யப்பட்ட நாளாகக் கருத்த் தேவையில்லை எனவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு 3வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.வி.கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu