மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட தாரகை!ஜெயலலிதா பிறந்ததினம் இன்று

மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட தாரகை!ஜெயலலிதா பிறந்ததினம் இன்று
X
பல ஏற்றத்தாழ்வுகள், அவமானங்களை சந்தித்து, சோதனைகளை சாதனைகளாக்கி, அரசியல் வானில் பிரகாசித்தவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று முழங்கிய இரும்பு பெண்மணியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1948ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார். ஜெயலலிதாவின் இயற்பெயர், கோமளவல்லி. சீனிவாசன், அம்புஜா என்கிற வித்யாவதி மற்றும் பத்மா, ஆகியோர் உடன் பிறந்தவகள்.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம் - வேதவல்லிக்கு மகளாக, புனிதமான மாசி மக நன்னாளில் ஜெயலலிதா பிறந்தார். தாயாரின் பூர்வீகம் ஸ்ரீரங்கம். இரண்டு வயதாக ஜெயலலிதா இருந்த போது, தந்தை மறைந்தார்; அதன் பின்னர், அவருக்கு தாயே எல்லாம்.

தனது 6 வயது முதல் 10 வயது வரை பெங்களுரில் உள்ள தாத்தா பாட்டி வீட்டில், ஜெயலலிதா வளர்ந்தார். பள்ளிக் காலம், பெங்களூரு பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கழிந்தது. வேதவல்லி என்ற பெயரை சந்தியா என்று மாற்றிக் கொண்ட தாயுடன், சென்னைக்கு வந்த ஜெயலலிதா, 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் 10-ம் வகுப்பு படித்தார். எப்போதும் துறுதுறுவென சுட்டி, படிப்பில் கெட்டி.

கடந்த 1963 ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளித்தேர்வில் ஜெயலலிதா மாநிலத்திலேயே முதல்மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கல்லுாரியில் தொடர்ந்து படிக்க மத்திய அரசு ஸ்காலர்ஷிப் வழங்கியது. ஆங்கிலத்தில் மிகப் புலமை பெற்றிருந்த ஜெயலலிதா எதிர்காலத்தில் கல்லுாரியில் ஆங்கில விரிவுரையாளராகவே விரும்பினார்.

ஆனால், கல்லூரியில் கால் பதிக்க நினைத்த ஜெயலலிதாவுக்கு, சினிமா வாய்ப்புகள், கதவை தட்டின. "எபிஸில்" என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1964-ல் "சின்னடா கொம்பே" (Chinnada Gombe) என்ற கன்னட படம் மூலம் திரை உலகில் நுழைந்தார். செண்டிமெண்ட் பார்க்கும் ஜெயலலிதா, தன் முதல் படத்தில் விதவை வேடத்தில் நடித்தது ஆச்சர்யமானது. இப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து "வெண்ணிற ஆடை" என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார்.


நடிப்பாலும், வசீகரத்தாலும் கட்டிப் போட்ட ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் எம்.ஜி.ஆர் உடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, முத்துராமன், எஸ். எஸ். ஆர், சிவக்குமார், என். டி. ஆர், நாகேஸ்வரராவ் போன்ற ஜாம்பவான்களுடன் கதாநாயகியாக நடித்து, புகழின் உச்சிக்கு சென்றார். 'நதியைத்தேடி வந்த கடல்" உடன் தன் திரைப்பயணத்தை முடித்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் உடன் நடித்த ஜெயலலிதா, அவரது அபிமானத்தை பெற்றார். 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. கட்சியின் பிரச்சார செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். இவ்வாறு, சினிமாவில் இருந்து ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது. 1983-இல், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்தார். 1987ல் ராஜ்யசபா உறுப்பினரானார் ஜெயலலிதா.


கடந்த 1988இல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக உடைந்ததாலும், 1989 தேர்தலில், எம்.ஜி.ஆர் வாரிசு நானே என்று நிரூபிப்பது போல், தேர்தலில் முத்திரை பதித்தார். பிளவுபட்ட அதிமுக ஒன்றானது. தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. வெறும் 27 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

பின்னர் காட்சிகள் மாறின. ஜெயலலிதாவின் பேச்சு, கம்பீரம், துணிச்சல், மக்களை கவர்ந்தன. இதன் பயனாக, 1991 முதல் 1996, தமிழக முதல்வராக இருந்தார். ஆட்சி காலத்தில் சொத்துக் குவிப்பு சர்ச்சைகள், வழக்கு போன்றவற்றால், அடுத்து வந்த தேர்தலில் அரியணையை ஜெயலலிதா இழந்தார். எனினும் 2001 தேர்தலில் மீண்டும் முதல்வரானார்.

கடந்த 2006 தேர்தலில், அதிமுக மீண்டும் ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் இழந்தது. எனினும் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், பெரும் வெற்றியை பெற்றும், மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயலலிதா. இடையே, சொத்துக்குவிப்பு வழக்குகள் சறுக்கல்களாக அமைந்தன.


கடந்த 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதும் 5-வது முறையாக ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். 2016 தேர்தலில் அதிமுக வீறுகொண்டு எழுந்தது. முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஆட்சி காலத்தை முழுமையாக முடிக்க மாட்டார் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆம், உடல்நலக் குறைவால், 2016 ஆம் வருடம் செப்டம்பர் 22ல், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்களுக்கு பின்னர், டிசம்பர் 5 ஆம் தேதி இரவு காலமானார்.

தன்னம்பிக்கை, துணிச்சல், தீர்க்கமாக முடிவெடுக்கும் பாங்கு போன்றவை ஜெயலலிதாவுக்கே உரிய குண நலன்கள். வீட்டைப் போலவே பெண்களால் நாட்டையும் நடத்த முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த இருப்பும் பெண்மணி அவர். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழங்கிய தாரகையை, அதிமுகவினர் அம்மா என்றே அழைத்தனர். அவரது பிறந்தநாளில் போற்றுவோம்!

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!