வாசகர்களைக் கவர்ந்த எழுத்துக்களைத் தந்த ஜெயகாந்தன் பிறந்த நாளின்று

வாசகர்களைக் கவர்ந்த எழுத்துக்களைத் தந்த ஜெயகாந்தன் பிறந்த நாளின்று
X
தமிழ் எழுத்தாளர்களுக்கும்,லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் கடந்த 40 ஆண்டுகளாகப் பிடித்துப்போன ஒரு காந்தப் பெயர் ஜெயகாந்தன்

நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்களுக்கும், லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் கடந்த 40 ஆண்டுகளாகப் பிடித்துப்போன ஒரு காந்தப் பெயர்தான் ஜெயகாந்தன். 137 கதைகளைக் கொண்ட 15 சிறுகதைத் தொகுதிகள், 35 குறு நாவல்கள், 14 நாவல்கள், 20க்கு மேல் கட்டுரைத் தொகுப்புகள், சில மொழி பெயர்ப்புகள், ஒரு நாடகம்-இவை தமிழுக்கு அவர் தந்த-அவரே சொல்லிக் கொள்வதுபோல-'மாஸ்டர் பீஸ்' படைப்புகள்.

இந்த நூற்றாண்டின், சிறுகதை நாவலில் மிக அதிக அளவில் வாசகர்களைக் கவர்ந்த எழுத்துக்களைத் தந்தவர். புதுமைப்பித்தனுக்கும் மேலாக, எதிர்த்தும் - ஆதரித்தும் பெரிய விவாதங்களைக் கிளப்பியவரும் ஜெயகாந்தன்தான். புதுமைப்பித்தன் தொட்டார், விந்தன் தொடந்தார் எனினும், சேரி ஜனங்களையும், அன்றாடங்காய்ச்சிகளையும் 'காவிய நாயகர் களைப் பார்ப்பது போல' நம்மைப் பார்க்க வைத்தவர் அவர்தான்.

படித்து முடித்து சில நாட்களாவது 'அந்தச் சிந்தனையிலிருந்து மீளமுடியவில்லை' என்று கூறுமளவுக்குத் தமிழ் வாசகர்களைப் பெரிய அளவில் பாதித்தவை ஜெயகாந்தனின் படைப்புகள். 'நேற்று ஒரு ஜெயகாந்தன் நாவல் படித்தேன்… ராத்திரியெல்லாம் தூக்கமில்லை' என்பவர்களை இன்றும் காணமுடியும். அவர் 'படித்தது' ஐந்தாம் வகுப்பு வரை தானாம். ஆனால், தமிழகத்தில் தனி ஒரு படைப்பாளியாக அதிக அளவு எம்.ஃபில், பி.எச்.டி. பட்டங்களை ஆய்வாளர்களுக்குக் 'கொடுத்திருப்பவர்' – ஜெயகாந்தன்தான்.

1966-இல் ஒரு சிறுகதை, 1969-இல் அதுவே தொடர்கதை, நடுவிலேயே தலைப்பு மாறியது, 1979-இல் மீண்டும் இன்னொரு பத்திரிக்கையில் அதன் தொடர்ச்சி. ஒரே கருவில் 5 வருடத்தில் அவ்வப்போது வந்த ஏழு குறு நாவல்கள் ! இதெல்லாம் ஜெயகாந்தன் மட்டுமே செய்த தமிழ் இலக்கிய 'சித்து விளையாட்டுக்கள்!' தமிழில் கொலைக்கதைகள் எழுதிச் சம்பாதித்தவர்கள் உண்டு. சினிமா கதாசிரியர் கவிஞர்கள் சம்பாதித்ததும் உண்டு. ஆனால், தனது கதை இலக்கியப் புத்தக விற்பனைமூலமே அதிக சம்பாத்தியம் கண்டு, செலவு பிடிக்கும் சென்னையில் வசதியாக வாழும் முழுநேர இலக்கியவாதி இவராகத்தானிருப்பார்.

ஆனால்-அவரை 'முரண்பாடுகளின் மூட்டை' என்பவரும் இருக்கிறார்கள்! தன்னைப் போன்ற சாயலில் இவரே (முதலில் 'சிலநேரங்களில் சில மனிதர்கள்'- பிறகு 'கங்கா எங்கே போகிறாள்' நாவல்களில்) படைத்திருக்கும் ஆர்.கே.எனும் 'எழுத்தாளர் ஆர்.கே.வி. (விஸ்வநாத சர்மா)' பற்றி அவரது தாயார் கூறுவதாக ஜெயகாந்தனே எழுதியுள்ள வரிகளைப் பாருங்கள்:

"இவன் எழுதற கதைகளைப் பத்தியா பேசிண்டிருக்கேள் ? உன்னை மாதிரி இருக்கறவாதான் ஒரேயடியாப் புகழறேள். இவன் என்ன எழுதறான்? எல்லாத்துக்கும் ஒரு கோணக்கட்சி பேசுவான். நேக்கு ஒண்ணும் பிடிக்கறதில்லேடிம்மா. ஆனா, அவனோட பேசி யாரும் ஜெயிச்சுட முடியாது. நியாயத்தை அநியாயம்மான். அநியாயத்தை நியாயம்பான் (கங்கா எங்கே போகிறாள்-பக்:117)

இது நெசமா? என்று தெரியவில்லை என்றாலும் சாத்தியம் : எம்ஜிஆர் வீட்டிலிருந்து ஜெயகாந்தனுக்கு ஒருநாள் சூடான அழைப்பு வந்ததாம் : "தலைவர் உன்னைப் பார்க்கணும்னு சொல்றார்."அதே சூட்டில் ஜெயகாந்தன் சொன்ன பதில்:"சரி. வரச் சொல்..!"

அதுதான் ஜெயகாந்தன் !

இப்படியான ஜெயகாந்தனின் இந்த 'சுய விமர்சனத்தில்' எந்த அளவுக்கு உண்மை உள்ளது? இந்த கேள்விக்கு விடைகாண்பதே அவர் பிறந்த நாளுக்கான சேதியாகும்

Tags

Next Story