மாணவர்கள் செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டம்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவரான மயில்சாமி அண்ணாதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை பாரதத்தின் அம்ருத் மகோத்சவம் என்ற பெயரில் மத்திய அரசு மற்றும் அனைத்து துறைகள் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் விண்வெளித்துறையின் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் சார்பில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் 75 செயற்கைகேள்களை தயாரிக்க உள்ளனர்.
இந்த வகை செயற்கைகோள்கள் வருகிற ஆகஸ்டு மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்திற்குள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் அதிகபட்சம் 500 கிலோ மீட்டருக்கு உட்பட்டு குறைந்த பூமி சுற்றுப்பாதையில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதற்கான முன்பதிவில் 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பதிவு செய்து உள்ளனர். தமிழகத்தில் 7 கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். தரை கட்டுப்பாட்டு மையம், செயற்கைகோள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை சேர்த்து ரூ.80 லட்சம் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசிடம் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்துவது தொடர்பாகவும், இந்த திட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தமிழக அரசிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மாணவர்கள் தயாரிக்கும் 10-க்கு 10 சென்டி மீட்டர் கன அடியில் 1,500 கிராம் எடையில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்கள் உதவியுடன் செல்போனுக்கு தேவையான இணையதள வசதியை நேரடியாக செயற்கைகோள்கள் மூலம் வழங்க முடியும். அதேபோல் செயற்கைகோளில் இருந்து தேவையான தரவுகளை தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தான் பெற வேண்டும் என்பதில்லை.
அதற்காக தனியாக செல்போன் செயலி ஒன்றும் தயாரிக்கப்பட உள்ளது. மாணவர்களும் விண்வெளியில் சாதிக்க முடியும் என்பதுடன், மாணவர்களின் வெற்றியும், வளர்ச்சியும், நாட்டின் வெற்றியையும் வளர்ச்சியையும் குறிக்கும் என்பதால் பலர் இதற்கு ஆதரவாக உள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் 2030-யை மைய்யமாகக் கொண்டு புதிய விண்வெளி செயற்கைகோள்கள் விவசாயம், நீர், பாதுகாப்பு, சுகாதாரமான ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த விண்வெளி பயணத்திட்டம் பயன்படும் என்று கூறினார்.
உடன் திட்ட இயக்குனர் க.கோபாலகிருஷ்ணன், மேலாளர் எஸ்.சண்முகம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu