போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் பொங்கல் நேரத்தில் தேவையா? ஐகோர்ட்டு கேள்வி
பொங்கல் பண்டிகை நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அவசியமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, நேற்று முதல் (ஜனவரி 9) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.
தொழிற்சங்கங்களின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இரண்டு முறை தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் தீவிரமாக உள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஜெ.ரவீந்திரன் பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிற நிலையில் தற்போது சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
அப்போது தொழிற் சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டபடி முன்னரே நோட்டீஸ் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், போராட்டம் நடத்த உரிமை இல்லை என நாங்கள் கூறவில்லை. தற்போது பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் நாங்கள் கூறுகிறோம். பொங்கல் பண்டிகை நேரத்தில் இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அவசியமா? என கேள்வி எழுப்பினார். இந்த போராட்டம் மூலம் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என கேட்டனர். பின்னர் ஓய்வூதியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பிற்பகலில் 2.15 க்கு பதில் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu