பத்திரிகையாளர் நலவாரியமா? முதலாளித்துவமா? மறுபரிசீலனை செய்ய பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்
பத்திரிக்கையாளர் நலவாரியம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் பத்திரிகையும் ஒன்று. பத்திரிகை பணியில் தம்மை ஈடுபடுத்தி கொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியை மேற்கொண்டுள்ளனர். ஊடகம், நாளிதழ்கள், வாரமிருமுறை இதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள், டிஜிட்டல் ஊடகம் என்று பல்வேறு இடங்களில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல ஆயிரம் பேர் பத்திரிகையாளர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். பலர் எந்த பலனும் அனுபவிக்காமல் பத்திரிகையாளனாகவே இறந்தும்விடுகின்றனர். பத்திரிகையாளராக இவர்கள் பணியாற்றும் இடங்கள் யாவும் மத்திய அரசின் பத்திரிக்கை பதிவாளர் அனுமதி வழங்கியுள்ள இடங்களில்தான் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்காக தொழிற்சங்க விதிகளின்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகை சங்கங்கள் முறையாக இயங்கி வருகிறது. இத்தகைய சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கிடும் அதிகாரம் எந்த அதிகார சக்திக்கும் இல்லை என்பதே சட்டம் சொல்லும் உண்மையாகும். 4ம் தூணான பத்திரிக்கையை மற்ற மூன்றினாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதே இதன் அர்த்தம். பத்திரிக்கை துறையை முடக்குவது என்பது பத்திரிக்கை தொழிலின் குரல்வளையை நெறிப்பதற்கு சமமாகும். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்காக போராடிய சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்காமல் தமிழக அரசு நலவாரியத்தை அமைத்திருப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கடைகோடி செய்தியாளர்கள் வரையில் நல வாரியத்தால் பயனடைய வேண்டும் என்றால் அதற்காக களப்பணியாற்றுகின்ற சங்கங்களுக்கு அந்த வாரியத்தில் பிரதிநிதித்துவம் தரவேண்டும். அதற்குரிய பணிகளை மேற்கொள்ளாமல் பிரபல பத்திரிகைகளின் உரிமையாளர்களை, அங்கு முதலிடம் வகிப்போரை மட்டும் அக்குழுவில் நியமித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. தாங்கள் நியமித்துள்ள பத்திரிகையுலக பிரபலங்களை அவர்களது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களே சந்திப்பதற்கு தவமிருக்க வேண்டும் என்ற நிலையில், தமிழகத்தில் ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் செய்தியாளராக பணியாற்றுபவர்களால் அவர்களை எப்படி சந்திக்க இயலும்? அவர்களின் பிரச்னைகள் இவர்களுக்கு எப்படி தெரியும்?
இத்தகைய எதார்த்தமான உண்மை நிலையை உணர்ந்து தமிழக அரசு நியமித்துள்ள பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும். இப்போது இந்த பட்டியலில் இருக்கக்கூடிய பத்திரிக்கை நிறுவனங்கள் அவர்களிடம் பணியாற்றும் எத்தனை செய்தியாளர்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்கி உரிமைகளை வழங்கி செயல்பட செய்துள்ளது? இதில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு செய்தியாளர்கள் என குறிப்பிடாமல் பகுதி நேர எழுத்தர் என்றும், பகுதி நேர ஊழியர் என்றும் சொல்லி வேலை வாங்கி வருகின்றனர். செய்தியாளர்கள் என ஒரு வார்த்தை அளவில் கூட உரிமை வழங்கியது கிடையாது. இந்த பட்டியலில் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற கூடிய செய்தியாளர்கள் தற்போது தமிழக முதல்வர் கருணை அடிப்படையில் வழங்கிய கொரோனா நிவாரண நிதியை வாங்கக்கூடாது என கூறி இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இப்படிப்பட்ட உரிமையாளர்களை இந்த பட்டியலில் சேர்த்திருப்பதால் இது பத்திரிக்கையாளர் நலவாரிய பட்டியலா அல்லது பத்திரிக்கை உரிமையாளர்கள் நலவாரிய பட்டியலா என்பது தெரியவில்லை. தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லது இத்துடன் பத்திரிக்கையாளர் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள இந்த அறிவிப்பு தாலுகா அளவில் பணியாற்றி வருபவர்களுக்கு எந்த ஒரு பலனும் தர இயலாது என்பதே உண்மை. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கடும் கண்னடனங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu