கோவை கார் வெடி விபத்து சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிவேலையா?
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரடி விசாரணை நடத்தினார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு இந்து மத வழிபாட்டு தளம் கோட்டை ஈஸ்வரன் கோவில். இந்த கோவில் முன்பாக இன்று காலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் காரில் இருந்த நபர் உடல் கருகி இறந்தார்.காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறி அதில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார் விபத்தில் உயிரிழந்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் காரின் உரிமையாளர் முகவரி பொள்ளாச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முகவரி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த கார் வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் காரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்தது. ஜமேசா முபின் உக்கடம் பகுதியில் பழைய துணி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என் .ஐ. ஏ. அதிகாரிகள் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் சோதனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமேசா முபினிடம் அப்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காரில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர் .அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சோதனை சாவடியில் போலீசாரை பார்த்து பயந்து ஓடியதில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த ஜமேசா முபின் எந்த வழக்கிலும் இல்லை ஆனால் அவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் வெடிகுண்டு தயாரிப்பதற்காக இந்த மூலப் பொருட்களை வைத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் ஐ.எஸ். போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தாரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தை உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். மேலும் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. செந்தாமரை கண்ணனும் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கார் சிலிண்டர் வெடிப்பு, உயிரிழப்பு சம்பந்தமாக கோவை மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? இது தீவிரவாதிகளின் சதிவேலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள் மற்றும் இந்து அமைப்பு முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க தமிழக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu