எடப்பாடி பழனிசாமியின் அறை கூவல் தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியமாகுமா?

எடப்பாடி பழனிசாமியின் அறை கூவல் தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியமாகுமா?
X

எடப்பாடி கே.பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியின் அறை கூவல் தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

50 ஆண்டுகால அரசியல் வரலாற்றுக்கு சொந்தமான அ‌.இ.அ.தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த 'ஒற்றைத் தலைமை' என்ற கோஷத்திற்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது. ஆம் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியில் இதுவரை இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்வு பெற்று உள்ளார்.

இனி அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அவர் முறைப்படி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது தான் நிலுவையில் உள்ளது. இதற்காக கட்சியில் தேவையான அளவு சட்டத் திருத்தங்களும் செய்யப்பட்டு விட்டன. இந்த உறுதியான ஒரு முடிவின் மூலம் கட்சியில் இதுவரை ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்த பகைமை ஒரு முற்று பெற்றுவிட்டது. பொதுக்குழு கூட்டத்தில் 'துரோகி'என்ற ஒரு முத்திரையுடன் ஓ. பன்னீர்செல்வமும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.


இந்த முடிவு ஓ. பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் பொதுக்குழுவில் இப்படித்தான் முடிவு வரும் என்பது பெரும்பாலான அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவே இருந்தது.




அ.தி.மு.க. என்ற ஆலமரத்தின் நிறுவனர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.அவரைத் தொடர்ந்து அக்கட்சியை ஆயிரம் காலத்துப் பயிராக நிலை நாட்டுவதற்காக பாடுபட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே சேரும். அத்தகைய சிறப்புக்குரிய இந்த இயக்கத்தின் சுமார் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறப்படும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்பது சாதாரண ஒரு பதவி அல்ல. அசைக்க முடியாத ஒரு பதவி என்று கூட சொல்லலாம்.

ஏனென்றால் தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 31 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. அ.தி.மு.க.என்ற கட்சியில் ஜனநாயகம் நிலவி வருவதாக கட்சியினர் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வது உண்டு. அதற்கு காரணம் கட்சியின் கடை கோடி தொண்டன் கூட திடீரென ஒரு நாள் எம்.பி, எம்.எல்.ஏ. அமைச்சர் என உயர்ந்த பதவிக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்றால் அது அ.தி.மு.க.வில் மட்டுமே நடக்கும் என்பது ஒரு பொதுவான கருத்தாகும்.

அதைத்தான் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். சாதாரண கிளைச் செயலாளராக கட்சியில் எனது பணியை தொடங்கிய நான் இன்று பொதுச் செயலாளராக உயர்ந்து இருக்கிறேன் என்றால் காரணம் நமது கட்சியில் நிலவும் ஜனநாயக முறையும் எனது கடுமையான உழைப்பும் தான் காரணம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் அவர் இன்று இந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல இவன் போனால் இன்னொரு சின்னச்சாமி கூட இந்த பதவிக்கு வர முடியும் என்று ஆணித்தரமாக அடித்து கூறினார். அதுதான் அக்கட்சியின் ஒரு சிறப்பாகும். அத்துடன் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.வையும் ஒரு பிடி பிடித்துள்ளார்.

அ.தி.மு.க.என்ற இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அது தி.மு.க.விற்கு நேர் எதிர் கருத்துக்களைக் கொண்ட இயக்கமாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. அது எம்.ஜி.ஆர். காலமானாலும் சரி ஜெயலலிதா காலமானாலும் சரி. ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம் தி.மு.க.வை எந்த அளவு கடுமையாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவு விமர்சித்தது உண்டு. ஏன் தி.மு.க.வை அவர் தீய சக்தி என்று தான் பல கூட்டங்களில் குறிப்பிட்டு இருக்கிறார் .அதே வார்த்தையை இப்பொழுது எடப்பாடி பழனிசாமியும் தனது எதிர்ப்பின் உச்சகட்டமாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் அப்படி ஒரு இயக்கத்துடன் ரகசிய உறவு ஓ. பன்னீர்செல்வம் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


பொதுக்குழுவில் முத்தாய்ப்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில் 'நான் அஞ்சி வாழ்ந்தது கிடையாது. எனது கருத்தை எங்கும் ஆணித்தனமாக சொல்லும் துணிவை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறான். இந்த கட்சியை பலவீனப்படுத்த நினைக்கும் மு. க. ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறாது. நல்லது செய்வதற்காக தான் மக்கள் ஸ்டாலினை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர் பாதை மாறி செல்கிறார். காலத்தின் சக்கரம் சுழலும் என்பதை அவர்மனதில் கொள்ள வேண்டும். கீழே உள்ள சக்கரம் எந்த நேரமும் மேலே வரும் போது என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும் அதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த தேர்தலில் வெறும் மூன்று சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த ஆட்சி எப்போது மாறும் என மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நேரம் எப்பொழுது வேண்டுமானாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அதனை சந்தித்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும். ஜெயலலிதா அரசு மீண்டும் அமையும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது' என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

ஒற்றை தலைமை வந்தால் மட்டும் அ.தி.மு.க. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வீறு கொண்டு எழுந்து விடுமா? என்ற ஒரு கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அந்த ஒற்றை தலைமை இப்போது எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்துவிட்டது. பொதுக்குழுவில் அவர் விடுத்த அறைகூவல் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போல் ஆளுமை மிக்க தலைமையின் கர்ஜிப்பு போல் தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!