மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பிரபல நிறுவனங்களுக்கு அழைப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் ஸ்ரீராக் ஜிகே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
56, சாந்தோம் பிரதான சாலை, சென்னை என்ற முகவரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் இயங்கி வருகிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த மையம் எஸ்சி எஸ்டி பிரிவில் வேலை தேடுபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பிரபல நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
2021 டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 11 மாத காலத்திற்கு போட்டித் தேர்வு பயிற்சி, கணினி பயிற்சி, சுருக்கெழுத்துப் பயிற்சி, ஆகியவற்றை அதிகபட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி அளிக்கும் நிறுவனத்திற்கு மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ.1,200 வீதம் வழங்கப்படும். குரூப் சி பிரிவில் காலிப்பணியிடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் செயல்திறன் பெறும் வகையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இந்த திட்டத்திற்கு சீலிடப்பட்ட உறைகளில் விண்ணப்பங்கள் 25.11.2021, வியாழக்கிழமை, மாலை 5 மணிக்குள் மேற்கூறிய அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும். மேலும், விவரங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் www.labour.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu