எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை தனித்தனியாக திடீர் சந்திப்பு..!
அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மேலிடப்பொறுப்பாளர் சிடி ரவி.
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். இந்நிலையில், அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை கோஷம் வலுத்து, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது. நீதிமன்றத்தின் தடை காரணமாக ஏதும் முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் சலசலப்புடன் நிறைவடைந்தது. இதில், பன்னீர்செல்வம் பாதியில் கோபத்துடன் வெளிநடப்பு செய்தார்.
இத்தகைய அரசியல் பின்னணியில் கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி சென்றனர். இதையடுத்து, வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வத்திடம் அண்ணாமலை மற்றும் சிடி ரவி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியானது.
இதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அண்ணாமலை மற்றும் சி.டி ரவி ஆகிய இருவரும் சென்றிருந்தனர். குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமியிடமும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தனித்தனியாக தேடிச்சென்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu