இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

சொகுசு கார் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010 ஆம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார்.

ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி, வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும், 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நுழைவு வரியிடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என ஹாரிஸ் ஜெயராஜுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் அபராதம் செலுத்தும்படி தமிழக அரசு, ஹாரிஸ் ஜெயராஜுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம், காருக்கான நுழைவு வரியை ஏற்கெனவே செலுத்தி விட்டதாகக் தெரிவித்தார்.

மேலும், நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தனக்கு மட்டும் அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது எனவும் வாதிட்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags

Next Story