வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு
சென்னை ஐஐடியின் ரசாயனப் பொறியியல் துறை பேராசிரியர் ஜிதேந்திர சங்வாய், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளர் யோகேந்திர குமார் மிஸ்ரா.
தொழிலகங்களின் கார்பன் நீக்கத்திற்கு இந்தியப் பெருங்கடலும் வங்காள விரிகுடாவும் வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இருப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி-யின் ஆராய்ச்சியாளர்கள், இந்தியப் பெருங்கடலும் வங்காள விரிகுடாவும் அதிக அளவில் கரியமிலவாயுவை சேமித்து வைப்பதற்கான சாத்தியம் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். ‘கரியமிலவாயுவை நீக்குதல்’ என்றழைக்கப்படும் இந்த செயல்முறை தொழிற்சாலைகளின் கார்பன் நீக்கத்திற்கு உதவும். இதன் மூலம் பசுமைக் குடில் வாயு சேமிப்பு இடமாக இக்கடல்கள் செயல்படும்.
கடலில் 500 மீட்டர் ஆழத்திற்கு அடியில் திட ஹைட்ரேட் வடிவில் கரியமிலவாயுவை நிரந்தரமாக சேமித்து வைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். திரவ கரியமிலவாயுவாக சேமித்து வைப்பதால் தொழிலக வெளியேற்றங்களில் கார்பன் நீக்கம் செய்ய முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம், கடல் சூழலியலுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காமல் கார்பனைக் கட்டுப்படுத்த கடல்களின் முழுத் திறனையும் பயன்படுத்த முடியும். மிகப் பெரிய அளவில் கரியமிலவாயு சேமிப்பகமாக இக்கடல்கள் இருப்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற முக்கிய கண்டுபிடிப்பாகும். தேசிய கார்பன் கட்டுப்படுத்துதல் மற்றும் பருவநிலை மாற்ற இலக்குகளை இந்தியா அடைவதற்கு இந்த ஆராய்ச்சி உதவும் வகையில் அமைந்துள்ளது. சேமிக்கப்படும் கரியமிலவாயு மூலம், ‘வாயு நீரேற்றி’ எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பனி போன்ற பொருளை உருவாக்க முடியும்.
சென்னை ஐஐடியின் ரசாயனப் பொறியியல் துறை பேராசிரியர் ஜிதேந்திர சங்வாய், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளர் யோகேந்திர குமார் மிஸ்ரா ஆகியோரின் தலைமையில் இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்றன.
எனர்ஜி ஃப்யூவல்ஸ் (https://doi.org/10.1021/acs.energyfuels.3c00581, https://doi.org/10.1021/acs.energyfuels.3c02311) ஃப்யூவல் (DOI: https://doi.org/10.1016/j.fuel.2024.130990) உள்ளிட்ட பல்வேறு மதிப்பு வாய்ந்த இதழ்களில் இக்கண்டுபிடிப்புகள் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன.
இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் ஜிதேந்திர சங்காய், மீத்தேன் ஹைட்ரேட்டுகள் பல மில்லியன் ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் கடலில் இருக்கின்றன என்றார். கரியமிலவாயுவை விட மீத்தேன் அதிக ஆற்றல் மிக்க பசுமை இல்ல வாயுவாகும் என்று அவர் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டுதான் கரியமிலவாயுவைக் கடலில் சேமிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் பரிசீலித்தனர் என்று அவர் தெரிவித்தார். 2,800 மீட்டருக்கும் அதிக ஆழத்தில் கடல்நீரை விட கரியமிலவாயு அடர்த்தி மிகுந்து காணப்படுவதையும், இதனால் கரியமிலவாயு வெளியேற கூடுதல் ஈர்ப்புத் தடையை உருவாக்குவதையும் எங்களது ஆய்வு கண்டறிந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதுபற்றி விளக்கிய சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளர் யோகேந்திர குமார் மிஸ்ரா, சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் கரியமிலவாயுவைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்றார். கரியமிலவாயு சேமிப்பகமாக கடல்களை பயன்படுத்துவது அதில் சிறந்ததாக கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். கரியமிலவாயுவை கடலுக்கு அடியில் சேமித்து வைப்பதால் கடல் சூழலியலில் பெரிய தாக்கங்கள் ஏற்படாது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும் என அவர் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu