இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்படவில்லை, ரிஷிகளால் உருவாக்கப்பட்டது: கவர்னர்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (பைல் படம்)
நமது நாடு எந்த ராஜாவாலும் மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என ராஜபாளையத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
உலகில் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் அனைத்து துறைகளிலும் நவீனங்களை புகுத்தி வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பு வரை செல்போன் டேட்டா உற்பத்தியில் இரண்டு சதவீதம் மட்டுமே பங்களிப்பு இந்தியாவில் இருந்து வந்தது. தற்போது உலக அளவில் 24 சதவீதம் செல்போன் டேட்டா பங்களிப்பு இந்தியாவில் உள்ளது.
உலக அளவில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. புதிய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது. மத்திய அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல். சாலை வசதி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டிட வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி வருகிறது. வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கு சமமாக மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து வருகிறது.
நமது நாடு எந்த ராஜாவாலும், எந்த மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக ரிஷிகளாலும் வேதங்களாலும்தான் இந்தியா உருவாக்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த அறிவு ஒளி தான் மக்களை வழி நடத்துகிறது. அதனால் தான் இந்திய மக்கள் மிளிர்கின்றனர்.
நமது நாடு தற்போது காற்றுமாசு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இதை குறைப்பதற்காக கார்பன் ஃப்ரீ திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது. தற்சமயத்தில் இந்தியாவில் கார்பன் ஃப்ரீ வாகன பயன்பாடு 20 சதவீதமாக உள்ளது. இது மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. உலக மக்களின் நன்மைக்காக இந்தியா பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறது.
எடுத்துக்காட்டாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து 153 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கியது. இதன் மூலம் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் கொள்கையில் நமது நாடு செயல்பட்டு வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu