ரோடு ரோலர் ஓட்டி வாக்கு சேகரித்து திகைக்க வைத்த சுயேட்சை வேட்பாளர்

தனது தேர்தல் சின்னமான ரோடு ரோலரை ஓட்டி, வாக்கு சேகரித்த வேட்பாளர் பெருமாள்.
தேர்தல் வந்தாலே வேட்பாளர்கள் தங்களை களத்தில் மெருகேற்றிக் கொள்ள பல்வேறு யுக்திகளைக் கையாள்வார்கள். அதிலும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பல்வேறு வகைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள். சிறிய சின்னமாக இருந்தால் அதனை கைகளில் எடுத்துக் கொண்டு பொதுமக்களிடம் காண்பித்து வாக்கு சேகரிப்பாரகள். அதுவே பெரிய சின்னமாக இருந்தால் அதனை காகிதங்களில் அச்சடித்து வீடுவீடாக கொடுப்பார்கள். அவ்வாறு ஒரு பெரிய சின்னத்தை சுயேட்சை வேட்பாளர் வீடு வீடாக கொண்டு சென்று காண்பித்த சம்பவம், சென்னை வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி 45வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக பெருமாள் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ரோடு ரோலர் என்ற சின்னம் ஒதுக்கக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் மனதில் பதிய வைக்க, ரோடு ரோலர் சின்னத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, அதனை வீதி வீதியாக எடுத்துச் சென்று வாக்கு கேட்டு வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர். ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் மற்றும் வார்டு கவுன்சிலர் தேர்தலில் பெருமாள் நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பெருமாள் கூறுகையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை; குறிப்பிட்ட அந்த பகுதியில் யார் நன்றாக வேலை செய்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுத்தால் போதும் இந்த பகுதியில் நான் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளேன். அதனால் ஒரு வாய்ப்பு கேட்டு ரோடு ரோலர் சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்கள் மனதில் சின்னத்தை பதிய வைக்க அந்த சின்னத்திலேயே வந்து வாக்கு கேட்கிறேன் எனது வெற்றி உறுதி என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu