திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் இன்று 'வானவில் மன்றம்' துவக்கி வைப்பு

திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் இன்று வானவில் மன்றம் துவக்கி வைப்பு
X
திருச்சி காட்டூர் பாப்பாகுறிச்சி அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று வானவில் மன்றத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் உள்ளனர்.
திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் இன்று 'வானவில் மன்றத்தை' முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பா குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் 'வானவில் மன்றம்' தொடங்கி வைத்து 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களை முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம்ரூ. 25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களை முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த அறிவிப்பிற்கு இணங்க அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் 'வானவில் மன்றத்தை' தனது திருச்சி மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பா குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார். மேலும் அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

குழந்தைகளிடையே இயல்பாக உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளை காணும் மன பாங்கினை வளர்த்தெடுத்தல், தான் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையில் உள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலை புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் 'எங்கும் அறிவியல் யாவும் கணிதம்' என்பதாகும். அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்காக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கற்பித்தலில் இதுவரை அவர்கள் கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் இத்திட்டத்தை தொடர்ந்து பயன்படுத்திய வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்குவதற்கும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 'ஸ்டெம்' கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவார்கள். மேலும் அவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளை உடன் எடுத்தும் வருவார்கள்.

அரசு பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்காக ஏற்பாடுகளை செய்து ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள். மேலும் ஆசிரியர்களுக்கு அறிவியல் மற்றும் கணித வல்லுனர்களுடன் இணைய வழி கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சக ஆசிரியர்களுடனான துறை சார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு தருவதோடு பிற ஆசிரியர்கள் அறிவியலையும் கணிதத்தையும் எவ்வாறு கற்றுத் தருகிறார்கள், மாணவர்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்று அறிந்து கொள்வதோடு கற்பித்தல் முறைகளையும் பிறரிடம் இந்நிகழ்வின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் நவீன தொழில்நுட்பங்களையும் கணிதம் சார்ந்த புதிய யுத்திகளையும் அறிந்து கொள்வதுடன் அவற்றை வகுப்புகளில் குழந்தைகளிடத்தில் பகிர்ந்து கொள்ளவும் இந்த கலந்துரையாடல் உதவும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு கே.என். நேரு, வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், கதிரவன், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சீம்பால்..இத மட்டும் சாப்டாம இருக்காதீங்க!.. இதுல எவ்ளோ பெனிஃபிட்ஸ் இருக்கு தெரியுமா?