கோடநாடு வழக்கில், செல்போன்களில் கிடைத்த புதிய ஆதாரங்கள்; ஆந்திராவில் போலீசார் விசாரணை
கோடநாடு எஸ்டேட்
Kodanadu case,evidence found in cell phones,Police investigation in Andhra- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதனை ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் சயான் ஆகியோர் தலைமையிலான கேரளாவை சேர்ந்த கும்பல் அரங்கேற்றியது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. கோவை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் முதலில் இருந்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.
கொலை, கொள்ளை எப்படி நடந்தது என்பதை அறிய சம்பவம் நடந்த இடமான கோடநாடு பங்களா, எஸ்டேட் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பங்களாவின் மேலாளர், ஊழியர்கள், இந்த சம்பவத்தில் சாட்சி அளித்தவர்கள் என பலரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் பல முக்கிய தகவல்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனை கொண்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசார் ஏற்கனவே போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்து இருந்த 8 செல்போன்களை தங்களிடம் தரும்படி மனு அளித்து இருந்தனர். அந்த செல்போன்களில் ஏதாவது தகவல்கள் உள்ளதா என்பதை அறிய அதனை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும், அதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்த மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாளான 25, மற்றும் 26-ம் தேதிகளில் சயானும், கனகராஜூம் ஆந்திராவில் இருந்துள்ள தகவல் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை, கொள்ளை சம்பவம் நடந்த மறுநாளே 2 பேரும் கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சென்றதும், அங்கு அந்த மாநிலத்தில் மிக முக்கியமான தொழில் அதிபர் ஒருவரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் கோர்ட்டில் இருந்து வாங்கப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில் செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.
சயான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆந்திரா சென்றதும், அங்கு சில நாட்கள் தங்கியிருந்ததும் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அதிகாரிகள், சயான் மற்றும் கனகராஜ் ஆந்திராவில் சந்தித்த தொழில் அதிபரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஆந்திரா வரைக்கும் சென்றுள்ளது இந்த வழக்கில் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்த வழக்கில் இன்னும் சிலர் விசாரணை வளையத்திற்குள் வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu