தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி பதிவான வெயில் அளவு

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி பதிவான வெயில் அளவு
X
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தாலும், சில இடங்களில் அவ்வப்போது மழை தலைக்காட்டி வருகிறது. இன்று தமிழகத்தின் ௧௪ மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது.

அந்த வகையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களுக்கு மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.

நேற்று நாடு முழுவதும் பதிவாகியிருந்த வெயில் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், முதல் மூன்று இடத்தில் தமிழகத்தின் சேலமும் இருந்தது. ஆந்திராவின் அனந்தப்பூர் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் முதல் இடத்திலும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 109.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்து.

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி ஃபரான்ஹீட், வேலூரில் 106.88 டிகிரியும், சேலத்தில் 105.98 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களை பொறுத்த அளவில், வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றும் நாளையும், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஏப்.26 தொடங்கி ஏப்.30 வரை தமிழகம் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அது மட்டுமல்லாது இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அதேபோல இன்று தொடங்கி ஏப்.28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தை பொறுத்த அளவில் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. மேலும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்றும் எச்சரித்துள்ளது. வெயில் தீவிரமாக இருக்கும் நேரத்தில் மழை குறித்து அறிவிப்பு வெளியாகியிருப்பது தென்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!