மதியம் 1 மணி நிலவரப்படி 39% வாக்குகள் பதிவாகியது

மதியம் 1 மணி நிலவரப்படி  39% வாக்குகள் பதிவாகியது
X
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மதியம் 1 மணி வரை 39 % வாக்குகள் பதிவாகியது.

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.


திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்க்களித்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாக்களித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். கம்யூசிஸ்ட் கட்சியின் முத்தரசன், திருத்துறைப் பூண்டி அருகே வேலூர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.


சென்னை அண்ணாநகர் தொகுதியில் பாஜக தலைவர் எல்.முருகன் தனது வாக்கை பதிவு செய்தார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார். காலை வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே திருவான்மையூர் வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்த நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார்.


நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னணி நடிகர்களாக சூர்யா, கார்த்தி, நடிகர் சிவக்குமார் ஆகிய மூவரும் தி.நகர் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தொடர்ந்து நடிகர்கள் சூரி, பரத், அருள்நிதி, ராஜேஷ், சீயான் விக்ரம், சாந்தனு, விஷ்ணு,சித்தார்த் நடிகை ஜஸ்வர்யா ஆகியோர் வாக்களித்தனர்.

திருச்சி சிவா திருச்சி வெஸ்ரி பள்ளியிலும், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியிலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாக்களித்தார்

இதில் ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மட்டும் இன்றி பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்கு பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதியம் 1 மணி வரை உள்ள நிலவரப்படி 39 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

Next Story