விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி
பைல் படம்.
மண் வளத்தை மேம்படுத்துவற்கு, விவசாயிகள் ஏரி, குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் முழுவதையும் பயன்படுத்திய பின்னர், அதன் கீழ்ப்பகுதிகளில் படிந்திருக்கும் வண்டல் மண்ணில் விளைநிலத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண்வளத்தினை மேம்படுத்துவதற்கு இந்த ஏரிகள், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், விளைநிலங்கள் வளம் பெறும் என்பதுடன், அத்தகைய ஏரிகள், குளங்களின் நீர் சேமிப்புத்திறனும் அதிகரிக்கும்.
ஏரி, குளத்து வண்டல் மண்ணின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சென்ற 2021-22 ஆம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்பில், "ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ள ஊரக வளர்ச்சி, நீர்வள ஆதாரத் துறையின் ஒத்துழைப்புடன், விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தும் வகையில், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய துறைகளின் ஒத்துழைப்புடன் இப்பணியினை திறம்பட மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்தார்கள்.
இதனை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 05.04.2022 அன்று நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, ஏரி, குளத்தில் எந்தெந்த பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என்பது குறித்து, தொழில் துறை 2017-ஆம் ஆண்டிலேயே வழங்கிய அரசு ஆணை எண். 50-ன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் தவிர்த்து, இதர மாவட்டங்களில் உள்ள நீர் வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் அறிவிக்கை செய்யப்படுகின்ற ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரண்டு மாதங்களுக்குள் அதாவது தென்மேற்கு பருவமழை துவங்குவதற்குள் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய வேளாண் நிலங்களின் மண் வளத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் முழுவதும் வற்றி, வண்டல் மண்ணை எடுப்பதற்கு தயாராக உள்ளது. ஏரி, குளத்தில் படிந்திருக்கும் வண்டல், விளைநிலத்தின் வளத்தை அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்தத் திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu