சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். (கோப்பு படம்).
தமிழகத்தில் தஞ்சாவூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத மதுவிற்பனையால் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு விரைந்து செயல்பட்டு சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையில் அதிகாலையில் இருந்தே மது விற்பனை நடப்பதாகவும், 24 மணி நேரமும் மது குடித்து விட்டு வரும் குடிகாரர்கள் அந்தப் பகுதியில் வாழும் மக்களிடமும், கோயிலுக்கு செல்வோரிடமும் தகராறு செய்வதாகவும் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சட்டவிரோத மது வணிகத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சிங்காநல்லூர் பகுதியில் மூடி முத்திரையிடப்பட்ட குடிப்பகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த தெருவையே பார் தெரு என்று அழைக்கும் அளவுக்கு மது வணிகமும், குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்து விட்டதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் மது வணிகம் எந்த அளவுக்கு கட்டுப்பாடின்றி நடைபெறுகிறது என்பதற்கு இதுவே சான்று.
தமிழ்நாட்டில் சந்துக்கடைகள் என்ற பெயரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து பல முறை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்திய பாட்டாளி மக்கள் கட்சி, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் மற்றும் சயனைடு கலந்த மதுவால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பிறகும் சட்டவிரோத மது வணிகத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மதுவால் உயிரிழப்புகள் ஏற்படுவது ஒருபுறமிருக்க, அண்மைக்காலமாக தமிழ்நாடு என்றாலே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறும் மாநிலம், குடித்து விட்டு சாலையில் செல்லும் பெண்களையும், வீட்டில் இருக்கும் பெண்களையும் சீண்டும் குடிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநிலம், குடியை ஊக்குவிக்கும் மாநிலம் என்ற அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.
இந்த அவப்பெயரை போக்க வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை ஆகும். இது அரசின் செவிகளில் கேட்கிறதா? என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு சட்டவிரோத மது வணிகத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu