முதன்முறையாக ரூ.1,000 கோடி நிதி, வருவாயை உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்

முதன்முறையாக ரூ.1,000 கோடி நிதி, வருவாயை உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்
X

பைல் படம்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) நிதி, வருவாய் முதன்முறையாக ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடியைக் கடந்துள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதன்முறையாக 2021-22ம் நிதியாண்டில் மட்டும் ரூ.1,000 கோடி நிதி மற்றும் வருவாயை உருவாக்கியுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து ரூ.768 கோடி நிதியாகவும், ரூ.313 கோடி தொழிலக ஆலோசனை வாயிலாகவும் இந்தத் தொகை பெறப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சி மையத்தின் (Industrial Consultancy and Sponsored Research - ICSR) பேராசிரியர் மனு சந்தானம் தலைமையிலான குழுவினர் அர்ப்பணிப்புடன் இதற்கான ஒத்துழைப்புகளை செயல்படுத்தி வருகின்றனர்.

2021-22ம் ஆண்டில் நிதி அதிகரிப்பதற்குக் காரணமான முக்கிய திட்டங்கள்:

பேராசிரியர் கே.மங்கள சுந்தர், பேராசிரியர் அருண் தங்கிராலா ஆகியோர் தலைமையில் 'டைரக்ட்-டூ-ஹோம் (DTH) முறையில் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பக் கல்வி' - ரூ.300.28 கோடி

பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் தலைமையில் 'சாலைப் பாதுகாப்புக்கான திறன்மிகு மையம் (CoERS)' - ரூ.99.5 கோடி

பேராசிரியை ஹேமா ஏ.மூர்த்தி தலைமையில் 'இந்திய மொழிகளில் பேச்சுத் தொழில்நுட்பங்கள்' - ரூ.50.6 கோடி

டாக்டர் மிதேஷ் கப்ரா தலைமையில் 'இந்திய மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தரவுத் தொகுப்புகள் மற்றும் வரையறைகளை சேகரித்தல்' - ரூ.47 கோடி

கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிநவீன மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சி மையத்தின் செயல்திறன் மிகவும் ஊக்கம் அளிப்பதுடன், ஐஐடி மெட்ராஸ்-ன் செயல்திட்டத்துடன் முழுமையாக இணைந்துள்ளது. நிதியளிக்கும் முகமைகள் மற்றும் தொழில்துறையுடன் அதிகளவில் நாங்கள் தொடர்பு கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

நிதிசார் ஆராய்ச்சி மற்றும் தொழிலக நிதி குறித்த தரவுகள்:


ஆண்டு

அனுமதி அளிக்கப்பட்ட ஸ்பான்சர் திட்ட நிதி

தொழில்துறையிடம் பெறப்பட்ட நிதி

2017-18

ரூ.423 கோடி

ரூ.148 கோடி

2018-19

ரூ.386 கோடி

ரூ.228 கோடி

2019-20

ரூ.333 கோடி

ரூ.237 கோடி

2020-21

ரூ.484 கோடி

ரூ.230 கோடி

2021-22

ரூ.768 கோடி

ரூ.313 கோடி

தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியை மேம்படுத்த ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளை விளக்கி ஐஐடி மெட்ராஸ் டீன் (ஐசிஎஸ்ஆர்) பேராசிரியர் மனு சந்தானம் கூறுகையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிஎஸ்சி உள்பட என்பிடெல் கடந்த சில காலமாக மேற்கொண்டுவரும் திட்டங்களால் ஐஐடி மெட்ராஸ் நாட்டின் டிஜிட்டல் கல்வி மையமாகத் திகழ்கிறது. அதிலும் சமீபத்திய முன்முயற்சியான டைரக்ட்-டூ-ஹோம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் உள்ள மிகச் சிறந்த ஆசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சியின் பயன்பாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதால் தொழில்துறைக்கான நிதியை மென்மேலும் கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

இவை மட்டுமின்றி, உயர் தரமான ஆராய்ச்சிக்கு உகந்த சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஐஐடி மெட்ராஸ் ஏற்படுத்தித் தந்திருப்பதுடன் ஐசிஎஸ்ஆர் வழங்கும் சேவைகளுக்கும் ஆதரவை நல்கி வருகிறது. திட்டங்களைச் சுமுகமாக செயல்படுத்த நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. என்ஐஆர்எப் தரவரிசையில் நிலையான செயல்திறனைப் பெற்றிருப்பதால், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ்-ன் அந்தஸ்து உயர்ந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியைப் பெருமளவு உயர்த்துவதற்கு இது முக்கிய காரணியாக விளங்குகிறது என மேலும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக நிதி அதிகரித்து வருவது குறித்துப் பேசிய பேராசிரியர் மனு சந்தானம்,தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் நாட்டிலேயே முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இன்னும் வளர்ச்சிபெற வாய்ப்புள்ள கம்ப்யூட்டிங், 5ஜி ஆகிய துறைகளில் பெரும் மதிப்புள்ள திட்டங்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த நிதியுதவியின் வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தொழில்துறை நிதியுதவி கடந்த சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் திட்டங்களுக்கான நிதியை பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு நிதியில் (சிஎஸ்ஆர்) இருந்து வழங்குவதுதான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கலாம். மேலும், பெரிய அளவிலான தொழில்துறை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஐசிஎஸ்ஆர் திட்டமிட்டு இருப்பதால், அவைகளுக்கும் இது உதவிகரமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐஐடி மெட்ராஸ்-ன் தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியின் முக்கிய காரணிகள் குறித்து 2018 முதல் 2022 வரை ஐஐடி மெட்ராஸ்-ன் டீனாக (ஐசிஎஸ்ஆர்) இருந்த பேராசிரியர் ரவீந்திர கெட்டு தமது கருத்துக்களைக் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன் திட்டமிட்டு அமல்படுத்தப்பட்ட வலிமையான செயல்திட்டத்தின் முடிவுகளைத் தற்போது காண்கிறோம். அடிப்படையில் வளர்ச்சியும், ஆராய்ச்சித் திட்டங்களில் பரிமாற்றமும் கண்டிருப்பதுடன், தொழிலகங்களுக்கு தொழில்நுட்ப மாற்றங்களை வலியுறுத்தவும், சமூகத்திற்குப் பொருத்தமாக செயல்படுத்தவும் முடிகிறது எனக் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!