100 புத்தாக்க நிறுவனங்களை தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு: ஐஐடி மெட்ராஸ்
பைல் படம்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐஐடிமெட்ராஸ்), 2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட் அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த டீப்டெக் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் (IITMIC) என்பது பல்வேறு கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுத் திட்டங்களை வளர்த்தெடுத்தல், ஆதரவு அளித்தல், மேற்பார்வையிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.
2024-ம் ஆண்டில் தமது இலக்குகள் என்னென்ன என்பதைப் பகிர்ந்து கொண்ட ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “2023-ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் எண்ணற்ற லட்சியங்களை அடைய முடிந்தது. கடந்த ஆண்டில் ஐஐடி சான்சிபார் வளாகம் உள்பட பல்வேறு முக்கிய திட்டப் பணிகளை நாங்கள் மேற்கொண்டோம். முதன்முறையாக வெளிநாட்டில் நிறுவப்பட்ட ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தொடங்கப்பட்டிருப்பதுடன், மேலும் இதே முறையில் பல்வேறு அம்சங்களை மேற்கொள்ளவிருக்கிறோம். பல்துறை அறிவியலைக் கற்பிக்க புதிய பள்ளி ஒன்றையும் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம். தற்போது நாம் பல்துறைக் கல்வியை நோக்கி நகர்ந்து செல்வதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதிக எண்ணிக்கையிலான திட்டப் பணிகளை செய்த முடிக்க விரும்புகிறோம்” என்றார்.
பேராசிரியர் வி.காமகோடி மேலும் கூறுகையில், “நாட்டிற்குப் பெருமளவில் பயன்தரும் பல்வேறு உற்சாகமான முன்முயற்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்ளை 2024-ம் ஆண்டில் மேற்கொள்ளவிருக்கிறோம். 366 காப்புரிமைகளுடன் நடப்பு நிதியாண்டை (31 மார்ச் 2024) முடிக்கவிருக்கிறோம். நாளொன்றுக்கு ஒரு காப்புரிமை வீதம் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். ஐஐடி மெட்ராஸ்-ல் ஏராளமான புத்தாக்கங்களை செய்வது பெருமை அளிக்கும் விஷயமாகும். 2024-ல் 100 ஸ்டார்ட்அப்களைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். ஐஐடி மெட்ராஸ் மூலம் தொழில்ஊக்குவிப்பு செய்யப்பட்ட ஹைப்பர்லூப் ஸ்டார்ட்அப், ஈபிளேன், அக்னிகுல் காஸ்மோஸ், மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் சுவாரஸ்யமான பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். இந்த ஸ்டார்ட்அப்கள் மிகப்பெரிய அளவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளை அளிக்கும்” என்றார்.
பேராசிரியர் வி.காமகோடி மேலும் கூறுகையில், “தேசிய தரக்கட்டமைப்பு நிறுவனமான என்ஐஆர்எஃப்-ல் நம்பர்-1 என்ற தரவரிசையைத் தக்கவைக்க மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். உலகத் தரவரிசையிலும் உயர் தரவரிசைக்குச் செல்ல விரும்புகிறோம். ஐஐடி சான்சிபாரில் மேலும் இரண்டு புதிய படிப்புகளைத் தொடங்க உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu