செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஐஐடி மெட்ராஸ், எரிக்சன் நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஐஐடி மெட்ராஸ், எரிக்சன் நிறுவனம்
X

செராயுடன் ஐந்தாண்டுகளுக்கு இணைந்து செயல்பட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட எரிக்சன் நிறுவனம்.

ஐஐடி மெட்ராஸ், எரிக்சன் நிறுவனம் ஆகியவை இணைந்து செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சென்டர் ஃபார் ரெஸ்பான்சிபிள் ஏஐ (செராய்), எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து பொறுப்பான செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிகழ்வையொட்டி, எதிர்கால நெட்வொர்க்களுக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எரிக்சன் ரிசர்ச் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று, 'ரெஸ்பான்சிபிள் ஏஐ' (பொறுப்பான செயற்கை நுண்ணறிவு) களத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்து விவாதித்தனர்.

ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், 'பிளாட்டினம் கூட்டமைப்பு உறுப்பினராக' செராயுடன் ஐந்தாண்டுகளுக்கு இணைந்து செயல்பட ஒப்பந்தம் ஒன்றில் எரிக்சன் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வின்படி, செராயின் அனைத்து ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் எரிக்சன் ரிசர்ச் பங்கேற்று ஆதரவு அளிக்கும்.

'சென்டர் ஃபார் ரெஸ்பான்சிபிள் ஏஐ' என்பது, பொறுப்பான செயற்கை நுண்ணறிவில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான முதன்மை மையமாகவும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்தி இந்திய சுற்றுச்சூழல் அமைப்பில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடைநிலை ஆராய்ச்சி மையமாகவும் திகழ்கிறது.

6ஜி நெட்வொர்க்குகள் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைக் கொண்டு சுயமாக இயங்கக்கூடும் என்பதால், எரிக்சன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கருத்தரங்கில் தலைமை விருந்தினராக உரைநிகழ்த்திய ஐஐடி மெட்ராஸ் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) டீன் பேராசிரியர் மனு சந்தானம் கூறும்போது, "ஏஐ தொடர்பான ஆராய்ச்சி நாளைய வணிகங்களை இயக்குவதற்கான கருவிகளை உருவாக்குவதாகும். தொழில்துறையுடன் இணைந்து, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயலாற்ற முடியும் என ஐஐடி மெட்ராஸ் உறுதியாக நம்புகிறது. எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த அதிநவீன ஆராய்ச்சிப் பணியில் கூட்டாண்மையுடன் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எரிக்சன் ரிசர்ச் குளோபல் ஹெட் டாக்டர் மெக்னஸ் ஃப்ரோடிக், "ஏஐ-கட்டுப்படுத்தும் சென்சார்கள் மனிதர்கள் மற்றும் இயந்திரங்களை இணைக்கும் அதே வேளையில், நம்பிக்கை, நேர்மை மற்றும் தனியுரிமை இணக்கத்தை உறுதி செய்ய பொறுப்பான செயற்கை நுண்ணறிவு நடைமுறைகள் அவசியமாகிறது. பாரத் 6ஜி திட்டத்திற்கான இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஐஐடி மெட்ராஸ்-ன் செராய் இந்த கூட்டு முயற்சியில் இணைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

கருத்தரங்கின்போது கூட்டாண்மையைப் போற்றும் வகையில், 'எதிர்கால நெட்வொர்க்களுக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு' என்ற தலைப்பில் குழு விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் 'ரெஸ்பான்சிபிள் ஏஐ' மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தற்போதைய ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சில அங்கு காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்தியவர்கள் மற்றும் குழு விவாதத்தில் ஐஐடி மெட்ராஸ் குவால்கம் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சிப் பேராசிரியரான பேரா. ஆர்.டேவிட் கோயில்பிள்ளை, ஐஐடி மெட்ராஸ் செராய் முக்கிய உறுப்பினர் டாக்டர் ஹரீஷ் குருபிரசாத், செராய் முக்கிய உறுப்பினர் டாக்டர் அருண் ராஜ்குமார், எரிக்சன் ரிசர்ச் ஏஐ தலைவர் டாக்டர் ஜோர்கன் குஸ்டாப்சன், எரிக்சன் ரிசர்ச் நிறுவனத்தின் க்ளவுட் சிஸ்டம்ஸ் அண்ட் பிளாட்பார்ம்ஸ் தலைவர் டாக்டர் கேட்ரின் கிரான்போம், எரிக்சன் ரிசர்ச் இந்தியா-வின் ஏஐ/எம்எல் ஆராய்ச்சித் தலைவர் கவுஷிக் டே ஆகியோர் இடம்பெற்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!